வெளியிடப்பட்ட நேரம்: 21:54 (05/07/2018)

கடைசி தொடர்பு:14:31 (07/07/2018)

தினகரன் ஆட்களுக்கு வலைவீசும் திவாகரன்! - ஆர்.கே.நகரில் ஆரம்பித்த அரசியல் சதுரங்கம்

மாதத்தில் ஒருமுறையாவது சென்னை காசிமேடுப்பகுதி, ஜெயானந்த் திவாகரன் கட்டுப்பாட்டுக்கு வந்து விடுகிறது... இந்தப் போராட்டத்தில், ஆளுங்கட்சி விமர்சிக்கப் படுவதில்லை என்பதுதான் ஹை-லைட். இப்படியாக  நான்கைந்து பிரிவுகளாகி, தினமும் ஒரு போராட்டத்தை புதிய அ.தி.மு.க-வினர், எதிர்கொண்டு வருகின்றனர்.

தினகரன் ஆட்களுக்கு வலைவீசும் திவாகரன்! - ஆர்.கே.நகரில் ஆரம்பித்த அரசியல் சதுரங்கம்

திவாகரன் அணியினரைச் சமாளிக்கத்தான், தினகரன் அணியின் தகுதி நீக்க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஆதரவாளர்கள் இப்போது, ரொம்பவும் மெனக்கெட வேண்டியிருக்கிறது. ஆளுங்கட்சியையும், எதிர்க்கட்சியான தி.மு.க-வையும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் மண்ணைக் கவ்வ வைத்தவர் டி.டி.வி தினகரன். இந்த நிலையில், ஆர்.கே நகர் தொகுதியில் திவாகரன் அணியினர் பயணம் மேற்கொண்டிருப்பது தினகரன் அணிக்கு சவாலாக அமைந்துள்ளது.

தினகரன் அணி ஒரு போராட்டம் நடத்தினால், ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வோ, தி.மு.க-வோ கவுன்ட்டர் கொடுப்பதற்கு முன்பாகவே திவாகரன் அணி களத்தில் இறங்கி விடுகிறது. தினகரன் அணியில் உள்ள தகுதியிழப்பு எம்.எல்.ஏ-வான வெற்றிவேல், ``ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கழகத்தின் ஆணிவேராக சசிகலாவும், கழகத்தின் முகமாக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனும் செயல்பட்டு வருகிறார்கள். மன்னிக்க முடியாத துரோகத்தாலும், மறக்க முடியாத சூழ்ச்சியாலும் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, பல்வேறு அடக்குமுறைகள், அத்துமீறல்களுக்கு மத்தியில் கழகத்தை வலிமையோடு, முன்னெடுக்கும் பணியில் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செயலாற்றி வருகிறார். அவருக்குப் பக்கத்துணையாக, நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு இன்னல்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு, தியாகத்தாயின் பின்னால், நான் உட்பட 18 + 3 சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத் தொண்டர்களும் அணிவகுத்து நிற்கிறோம். ஆனால், எங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்தும் நோக்கில், எங்கள் உணர்வைக் காயப்படுத்தும் எண்ணத்தில், சசிகலா குடும்பத்தைச் சார்ந்த திவாகரனும், ஜெய்ஆனந்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது.

காசிமேட்டில் பெண்கள் வரவேற்பில் ஜெயானந்த் திவாகரன்

மறைந்த மகாதேவனின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு துக்கம் விசாரித்த சில அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும், மூளைச்சலவை செய்து, அவர்களை நிரந்தரமாக எடப்பாடி அணியில் இருக்குமாறு பார்த்துக்கொண்டது யாரென்பதும் எங்களுக்குத் தெரியும். மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணியக்கூடாது என்கிற காரணத்தினால்தான், சசிகலா நெஞ்சம் நிமிர்த்தி சிறைக்குச் சென்றார். ஆனால், ஏதோ தங்கள் பின்னால்தான் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதுபோல் தோற்றத்தை உருவாக்கி, மதவாத சக்திகளுக்கு அடிமையாகிப்போன பழனிசாமியோடு தொடர்பு வைத்துக்கொண்டு சசிகலாவை சிறையிலிருந்து மீட்கப்போகிறேன் என்கிற ரீதியில் திவாகரன் செயல்படுவது உண்மைக்குப் புறம்பானது. இதை முதலில் சசிகலா ஏற்றுக்கொள்வாரா? சுயலாபத்துக்காக கழகத்தையும், எங்களின் தியாகத்தையும் பலிகடாவாக்க முனையாதீர்கள். நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம். இந்த நேரத்தில் அனைவருக்கும் ஒன்றைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். எங்கள் தலைமை சசிகலாவும், டி.டி.வி தினகரனும்தான். இவர்கள் இருவரைத் தாண்டி, வேறு எவரின் கண்ணசைவுக்கும், குரலுக்கும் எங்கள் சிரம் அசையாது, எவருக்காகவும் எங்கள் தரம் மாறாது. எதுவரினும், எவர் எதிர்ப்பினும், எங்கள் பயணம் என்றும் சசிகலாவுடனும், தினகரனுடனும்தான் என்பதில் மலையளவு உறுதியோடு இருக்கிறோம், காலத்துக்கும் இருப்போம்" என்று தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.  

காசிமேட்டில் மதுசூதனன் ஆறுதல்

ஜெயானந்த் திவாகரனோ, ``வெற்றிவேல் பதிவாக வெளிப்பட்டிருப்பது, அவருடைய கருத்து அல்ல. இன்னொருவர் கருத்தையே அவர் பதிவிட்டிருக்கிறார்" என்று பதிலடி கொடுத்தார். ஆக, டி.டி.வி. தினகரன் குரலாக, அவர் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலும், திவாகரன் குரலாக ஜெயானந்த் திவாகரனும் மறைமுகத் தாக்குதலை களத்தில் தொடர்கின்றனர். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். குறித்த விமர்சனங்களோ, ஆட்சி குறித்த விமர்சனமோ, திவாகரன் தரப்பிலிருந்து வெளிப்படுவதில்லை. தினகரன் தரப்புக்குத்தான் இப்போது இரண்டு வேலை கையில் இருக்கின்றன. ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். குறித்த விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டும்; திவாகரன் தரப்புக்கும் பதிலடி தரவேண்டும். கூடுதல் பணியாக தி.மு.க. எதிர்ப்பும், பி.ஜே.பி மீதான எதிர்ப்பும் கூடவே பயணிக்கிறது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரன் வெற்றிக்காகப் பாடுபட்டவர்களில் வெற்றிவேல் முக்கியமானவர். அப்போது வெற்றிவேலின் டீமில் இருந்தவர் அட்வகேட் செல்வராஜ்குமார். மீனவ சமுதாயப் பிரமுகரான இவர், அமைச்சர் ஜெயக்குமாரின் எதிரணியாக தன்னிச்சையாகவே செயல்பட்ட காரணத்தால், டி.டி.வி. தினகரன்- வெற்றிவேல் அணியில் எளிதில் ஐக்கியமானவர். இப்போது, அட்வகேட் செல்வராஜ்குமாரும், அவரது ஆதரவாளர்களும் திவாகரன் அணிக்குப் போய்விட்டனர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமாக டி.டி.வி. தினகரனின் அ.தி.மு.க-வும், திவாகரனின் அ.தி.மு.க. 'அண்ணா திராவிடர் கழக'மாகவும் மாறியிருக்கிறது. திவாகரனின் மகன் ஜெயானந்த் திவாகரனும் தன் தரப்பில், ‘போஸ் மக்கள் பணியகம்’ என்ற அமைப்பைத் தொடங்கி கொடியில், பி.எம்.பி. என்று ஆங்கிலத்தில் கட்சியின் பெயர்ச் சுருக்கமும் வெளியிட்டிருக்கிறார்.

டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்

சென்னைத் துறைமுகம் டூ மணலி வரையில் செல்லும் ராட்சதக் குழாயில் கச்சா எண்ணெயைக் கொண்டு போகும் திட்டப்பணியின் மையத்தில் காசிமேடு பகுதியும் வருகிறது. முன்னர் ராயபுரத்தில் இருந்த இந்தத் தொகுதி, இப்போது ஆர்.கே நகருக்கு மாறிவிட்டது. கடற்கரை மார்க்கமாகவே மணலி ஐ.ஓ.சி.எல் மற்றும் சி.பி.சி.எல். நிறுவனங்களுக்கு கச்சா எண்ணெயைக் கொண்டுபோகும் இந்தப்பணிக்கு மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆளுங்கட்சியைத் தவிர்த்து அனைத்துக் கட்சிகளுமே இதைக் கண்டித்துப் போராடி வருகின்றன. டி.டி.வி. தினகரன் தரப்பில் பலமுறை தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சமீபகாலமாக இந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்திருப்பது, ஜெயானந்த் திவாகரன்தான்... மாதத்தில் ஒருமுறையாவது சென்னை காசிமேடுப்பகுதி, ஜெயானந்த் திவாகரன் கட்டுப்பாட்டுக்கு வந்து விடுகிறது... இந்தப் போராட்டத்தில், ஆளுங்கட்சி விமர்சிக்கப்படுவதில்லை என்பதுதான் ஹை-லைட். இப்படியாக  நான்கைந்து பிரிவுகளாகி, தினமும் ஒரு போராட்டத்தை புதிய அ.தி.மு.க-வினர், எதிர்கொண்டு வருகின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்