வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (05/07/2018)

கடைசி தொடர்பு:22:30 (05/07/2018)

ஜெயலலிதா மரணம் குறித்த மாறுபட்ட தகவல்! - சூடுபிடிக்கும் விசாரணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நேரம் குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும் ஊழியர்களும் மாறுபட்ட தகவல்களை அளித்துள்ளது விசாரணை ஆணையத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாகப் பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டிய நிலையில், பிரச்னைகளுக்கு தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பான சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆணையம், சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் மற்றும் அப்போலோ மருத்துவமனையின் எக்கோ கருவியை இயக்கி வரும் நளினி ஆகியோர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர். கடந்த 2016 டிசம்பர் 4-ம் தேதி பிற்பகல் 3.50 மணியளவில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவரின் இதயம் செயலிழந்த பின்னர்தான், தன்னை மருத்துவர்கள் அழைத்தார்கள் என்றும், ஆணையத்தில் நளினி கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவின் அறைக்கு தான் செல்லும்போது, மசாஜ் மூலம் மீண்டும் இதயத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் ஆனால், தான் எக்கோ கருவியைப் பொருத்திப் பார்த்தபோது, அவரின் இதயம் செயலிழந்து காணப்பட்டதாகவும் நளினி ஆணையத்தில் தெரிவித்தாகக் கூறப்படுகிறது. அப்போலோ மருத்துவமனை டிசம்பர் 4-ம் தேதி பிற்பகல் 4.20 மணிக்கு ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தது. இதனால் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏறபட்ட நேரம் குறித்து மாறுபட்ட தகவல் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.