`மக்களின் எதிர்ப்பை மழுங்கடிக்கும் செயல்!’ - கெயில் நிறுவனத்துக்கு எதிராகக் கொந்தளிக்கும் போராட்டக் குழு | Mannargudi people opposes GAIL sponsoring sports ground

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (05/07/2018)

கடைசி தொடர்பு:23:00 (05/07/2018)

`மக்களின் எதிர்ப்பை மழுங்கடிக்கும் செயல்!’ - கெயில் நிறுவனத்துக்கு எதிராகக் கொந்தளிக்கும் போராட்டக் குழு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூரில் அமைக்கப்பட்டுள்ள உள் விளையாட்டரங்கத்துக்கு கெயில் நிறுவனம் 39 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இதை மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா பெற்றுக் கொடுத்துள்ளார். இதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கெய்ல் நிறுவனம் நிதி

விவசாய நிலங்களை அழிக்கும் கெயில் நிறுவனத்திடமிருந்து நிதி பெறுவது, மக்களைப் பிளவுப்படுத்தும் செயல் என குற்றம்சாட்டுகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய இக்கூட்டமைப்பின் ஆலோசகர் மருத்துவர் பாரதிச்செல்வன், ``விளைநிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதித்தால் விவசாயிகள் பல வகைகளிலும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதால்தான், தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் இதைச் செயல்படுத்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தடை விதித்தார்.

குழாயில் கசிவு ஏற்பட்டு வாயு வெளியேறினால் விவசாயிகளின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படும். 2013-ம் ஆண்டு ஆந்திராவில் இதனால் பல உயிர்கள் பறிபோனது. கெயில் குழாய் பதிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அந்த நிலங்களில் விவசாயிகள், கிணறு வெட்டக் கூடாது, ஆழமாக வேர்விடும் மரங்கள் வளர்க்கக் கூடாது, கட்டடம் கட்டக் கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. மன்னார்குடி அருகே நல்லூரில் உள்ள எரிவாயு கிணற்றிலிருந்து, திருமக்கோட்டை அனல் மின்நிலையத்துக்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் அடக்குமுறையுடன் விவசாய நிலங்களின் வழியாகக் கெயில் குழாய் பதிக்கப்பட்டு, எரிவாயு எடுத்துச் செல்லப்படுகிறது. விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல், இங்குள்ள வீடுகளுக்கு அருகிலும் இந்த ஆபத்தான குழாய் செல்கிறது.

மக்களின் எதிர்ப்பை மழுங்கடிப்பதற்காகவே கெயில் நிறுவனம், தற்போது விளையாட்டரங்கத்துக்கு நிதி கொடுத்துள்ளது. விளையாட்டு அரங்கத்தின் மூலம் இப்பகுதி இளைஞர்கள் பலன் அடைவது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். ஆனால், இதைப் பயன்படுத்தி, இப்பகுதி மக்களைக் கெயில் நிறுவனம் தன் வசப்படுத்துவதை ஏற்க முடியாது. இது மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கும். இந்த விளையாட்டு அரங்கத்தால் பலன் பெறும் மக்களையும் கெயில் குழாய்க்கு எதிராகப் போராடும் மக்களையும் பிளவுபடுத்துவதற்காகவே கெயில் நிதி கொடுத்துள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய ஆளும் கட்சி, பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. இதைத் தட்டிக் கேட்டு தடுத்து நிறுத்துவது எதிர்க்கட்சியின் கடமை. ஆனால், தி.மு.க-வினரும் இதற்கு துணைபோவது வேதனையாக உள்ளது’’ என ஆதங்கப்பட்டார்.

இதுகுறித்து டி.ஆர்.பி ராஜாவிடம் கேட்டதற்கு,``நம் வளங்களை வைத்து லாபம் ஈட்டும் கெயில் நிறுவனம், நம் மண்ணுக்கு அதனுடைய சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி வழங்க வேண்டும் எனக் கடிதம் எழுதியிருந்தேன். 18 மாதங்கள் கழித்து பல முயற்சிகளுக்குப் பிறகு இப்போது நிதி கிடைத்துள்ளது’’ என்றார்.