வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (05/07/2018)

கடைசி தொடர்பு:22:00 (05/07/2018)

`இப்படிச் செய்யலாமே?’ - சாக்லேட், பிஸ்கட் நிறுவனங்களுக்கு தூத்துக்குடி மாணவிகளின் வேண்டுகோள்

தமிழகத்திலேயே முதன்முறையாகத் தூத்துக்குடியில் பள்ளி மாணவிகளால் பயன்படுத்தப்பட்ட சாக்லேட், பிஸ்கட் உள்ளிட்டவற்றின் பிளாஸ்டிக் கவர்களை மாநகராட்சி மூலம் சம்பந்தப்பட்ட கம்பெனிகளுக்கே திரும்ப ஒப்படைக்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

ப்ளாஸ்டிக் கவர்களை சேகரிக்கும் மாணவிகள்

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவிகள் கடந்த 10 நாள்களாகத் தாங்கள் பயன்படுத்திய சாக்லேட் கவர், பிஸ்கட் பாக்கெட்டுகளின் பிளாஸ்டிக் கவர்கள் ஆகியவற்றையும் வீடுகளில் பயன்படுத்திய இதுபோன்ற பிளாஸ்டிக் தாள்களையும் மொத்தமாகச் சேகரித்து தூத்துக்குடி மாநகராட்சி மூலம் சம்பந்தப்பட்ட கம்பெனிகளுக்கே திருப்பி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. 

இது குறித்து 6-ம் வகுப்பு மாணவிகளிடம் பேசினோம், “சாக்லேட், பிஸ்கட் ஆகியவற்றைத் திண்பண்டங்களாகத் தினமும் சாப்பிடுகிறோம். இதைச் சாப்பிட்ட பிறகு, அப்படியே தூக்கி வீசி விடுகிறோம். காற்றில் பறந்து தெருக்களிலும் ரோடுகளிலும் அப்படியே கிடக்கிறது. மண்ணில் புதைந்தாலும் மக்குவதில்லை. அதனால், சாக்லேட், பிஸ்கட்களின் பிளாஸ்டிக் கவர்களைப் பள்ளி வளாகத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டு, 6-ம் வகுப்பில் படிக்கும் 360 மாணவிகளும், நாங்கள் பயன்படுத்திய கவர்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்திய கவர்கள் ஆகியவற்றை அந்தப் பெட்டியில் மொத்தமாகச் சேகரித்தோம். பிறகு, அந்தந்த கம்பெனிக் கவர்களைத் தனித் தனியாகப் பிரித்து வைத்துள்ளோம். இதை மாநகராட்சி மூலம் அந்தந்த கம்பெனிகளுக்குத் திருப்பி அனுப்ப இருக்கிறோம்.

அதனுடன், “உங்களது கம்பெனி பொருளான சாக்லேட், பிஸ்கட் ஆகியவை நன்றாகவும் சுவையாகவும் தரமாகவும் திருப்திகரமாகவும் உள்ளது. ஆனால், இதன் பிளாஸ்டிக் கவர் சுற்றுப்புறத்துக்கு கேடு விளைவிக்கிறது. மண்ணில் மக்காது. அதனால் எளிதில் மண்ணில் மக்கும்படியான தாளைப் பயன்படுத்தலாம்” என ஒரு கடித்தில் அனைத்து மாணவிகளும் கையெழுத்துப்போட்டு, இணைத்துள்ளோம். இதேபோல 7 முதம் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவிகளும், தாங்கள் பயன்படுத்திய தாள்களை சேமிக்கத் தனித்தனி பெட்டிகள் வைத்துள்ளோம்” என்றனர். 

இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் பேசுகையில், ``பிளாஸ்டிக் ஒழிப்பில் புதுமை நிகழ்ச்சியாகப் பள்ளி மாணவர்களால் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியைத் தமிழகத்தில் முதல் முறையாகத் தூத்துக்குடி பள்ளியில் தொடங்கியுள்ளோம். 6-ம் வகுப்பு படிக்கும் 360 மாணவிகள் கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை என 15 நாள்கள் பல பிராண்டுகளின் சாக்லேட் மற்றும் பிஸ்கட் தாள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் பிரிட்டானியா பிராண்டில் 10,660 கவர்களும் நாபிட்டி பிராண்டில் 3,412 கவர்களும்  ஐ.டி.சி பிராண்டில் 3,420 கவர்களும் நெஸ்ட்லேவில் 1,818 கவர்களும் மற்றும் காட்பெர்ரி பிராண்டில் 934 கவர்களும் என மொத்தம் 20,244 கவர்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றை சம்பந்தப்பட்ட கம்பெனிகளுக்கு அனுப்ப இருக்கிறோம். தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இதைச் செயல்படுத்த உள்ளோம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க