`பசுமை வழிச்சாலையின் பயன்கள் குறித்து தெரியாமல் எதிர்க்க கூடாது!’ - உயர் நீதிமன்றம்

சேலம் - சென்னை 8 வழி பசுமைவழிச் சாலை திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்களை முழுமையாக தெரிந்துகொள்ளாமல் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்றம்

பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் சாத்தூர் மாரியம்மன் கோயில் திடலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி, சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சுசீந்திர குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைதியான முறையில் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி ஓமலூர் காவல் ஆய்வாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அளித்த மனுக்கள் பரிசீலிக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிட்டப்பட்டது.

பசுமை

இதை ஏற்க மறுத்த நீதிபதி பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து வழக்கறிஞரிடம் கருத்துக் கேட்டார். பெரும்பாலான வழக்கறிஞர்கள் திட்டத்தை வரவேற்று கருத்து தெரிவித்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதி,`முதன்முறையாக சென்னை - சேலம் 8 வழிச் சாலை அமைக்கும் பெரும் திட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டம் இரு பெரும் நகரங்களுக்கிடையே உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்கும், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமையவும், இந்தத் திட்டம் வாய்ப்பளிக்கும்.சரக்குகள் குறித்த நேரத்தில் சென்றடைவதுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும், திட்டத்தின் பலனை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல், பொதுக்கூட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்’ என அறிவுறுத்திய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!