வெளியிடப்பட்ட நேரம்: 02:12 (06/07/2018)

கடைசி தொடர்பு:02:12 (06/07/2018)

“கம்யூனிஸ்ட்டுகள் போல செயல்பட வேண்டும்!” - காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு திருநாவுக்கரசர் அறிவுரை...

காங்கிரஸ்

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் ஈரோடு - பூந்துறை சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று (ஜூலை 5) நடைபெற்றது. ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.

கூட்டத்தின் போது திருநாவுக்கரசர் பேசுகையில், “தற்சமயம் நம்முடைய கட்சியில் 35 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த எண்ணிக்கை இன்னும் ஒரு மாதத்திற்குள் 50 லட்சமாக உயர வேண்டும். ஒரு கூட்டத்தில் 50 பேர் இருந்தாலும் சரி, 5 பேர் இருந்தாலும் சரி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேந்தவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மைக்கில் பேசிக் கொண்டே இருப்பார்கள். அதைப்போலவே நாமும் மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்து போராட வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களைச் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும். அப்போது தான் மக்களிடையே காங்கிரஸ் கட்சி மீது, மேலும் நம்பிக்கை உண்டாகும்” என்றார்.

காங்கிரஸ்

தொடர்ந்து பேசியவர், “தற்போது தமிழகத்தில் கிட்டத்தட்ட 60 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ரஜினியைப் போன்று இன்னும் அரசியல் கட்சியை ஆரம்பிக்காத பலர் தேர்தலுக்குள் இன்னும் 20 புதிய கட்சிகளைத் தொடங்கி விடுவார்கள். ஆனால், தி.மு.கவிற்கு அடுத்த பெரிய கட்சியாக நம்முடைய காங்கிரஸ் கட்சி தான் இருக்கிறது. எதிர்காலத்தில் நிச்சயமாக காமராஜர் ஆட்சி தமிழகத்தில் மலரும். மூன்றாவது நான்காவது அணி என்று எதுவும் கிடையாது. பி.ஜே.பியை காங்கிரஸ் கட்சியால் மட்டும் தான் வீழ்த்த முடியும். மோடிக்கு மாற்று ராகுல்காந்தி தான்” என்றார்.

காங்கிரஸ்

கூட்டத்திற்குப் பிறகு பத்திரிக்கையாளார்களைச் சந்தித்துப் பேசிய திருநாவுக்கரசர், “உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்கது. எனவே, உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதி விசாரணையை ஆரம்பிக்க இருக்கிறார். இந்த வழக்கின் தீர்ப்பினால் தமிழகத்தில்  பல அரசியல் மாற்றம் நிகழ வாய்ப்பிருக்கிறது. 8 வழிச்சாலைத் திட்டத்திற்காக கட்டாயப்படுத்தி, காவல்துறையைப் பயன்படுத்தி எதிர்ப்பு தெரிவிப்பவர்களுடைய நிலங்களை எடுக்க தமிழக அரசு முயற்சிக்க கூடாது. மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் மக்கள் மீது திணிக்கக் கூடாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. பல இடங்களில் கொலை, கொள்ளை, வன்முறை, குழந்தை கடத்தல் அதிகமாகியிருக்கிறது. காவலர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்” என்றார்.