வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (06/07/2018)

கடைசி தொடர்பு:06:30 (06/07/2018)

''தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கும்  நிர்ணயிக்கப்பட்ட கால பணிமுறையை நீக்குக..!'' ராமதாஸ்

ராமதாஸ்

''புதிய பொருளாதாரக் கொள்கையும், தாராளமயமாக்கமும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தொழிலாளர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகின்றன. முதலில் ஓய்வூதிய முறைக்கு வேட்டு வைக்கப் பட்டது. அதன்பின்னர் பெரும்பான்மையான தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி வளையத்திலிருந்து நீக்கப்பட்டனர். அடுத்தக்கட்டமாக, இப்போது நிர்ணயிக்கப்பட்ட கால பணிமுறை அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதன் மூலம் யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வேலைக்கு சேர்க்கலாம்; வேலையிலிருந்து நீக்கலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. சுருக்கமாகக் கூற வேண்டுமானால், அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் அமைப்பு சாரா தொழிலாளர்களாக்குவதற்கு தான் நிர்ணயிக்கப்பட்ட கால பணிமுறை வகை செய்கிறது. இதைவிட மோசமான ஆபத்து இருக்க முடியாது'' என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர், வெளியிட்ட அறிக்கையில், ''தொழிலாளர் நலச் சட்டங்கள் என்ற பெயரில் மத்திய அரசு உருவாக்கும் புதிய சட்டங்களும், சட்டத் திருத்தங்களும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவே அமைந்திருக்கின்றன. அந்த வகையில் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள நிர்ணயிக்கப்பட்ட கால பணி என்ற தத்துவம், அனைத்து வகை தொழிலாளர்களின் நிரந்தர பணி உரிமையை அப்பட்டமாக பறிக்கிறது; இது கண்டிக்கத்தக்கது.

நிர்ணயிக்கப்பட்ட கால பணிமுறை முதன்முதலில் 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆயத்த ஆடை உற்பத்தித் துறையில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டது. கூடாரத்திற்குள் முதலில் மூக்கை நுழைக்கும் ஒட்டகம், அதை யாரும் கண்டுகொள்ளாவிட்டால், ஒட்டுமொத்த கூடாரத்தையும் ஆக்கிரமித்துக் கொள்வதைப் போல, ஆயத்த ஆடைத் துறையில் மட்டும் நிர்ணயிக்கப்பட்ட கால பணிமுறையை அறிமுகம் செய்த மத்திய அரசு, இதுதொடர்பான விதிகளில் மாற்றங்களை செய்து அனைத்து துறைகளுக்கும் இம்முறையை நீட்டித்திருக்கிறது. இதனால் எந்தத் துறையில் பணியாற்றுபவர்களாக இருந்தாலும் அவர்களை அதிகபட்சமாக 15 நாட்களில் பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியும்.

பணியாளர்கள்


தொழிற்சாலைகளுக்கோ, வணிக நிறுவனங்களுக்கோ பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் போது நிரந்தர அடிப்படையில் தான் தேர்வு செய்வார்கள். ஆனால் அந்த முறையை மத்திய ஆட்சியாளர்கள் எப்போதோ மறைமுகமாக ஒழித்து விட்டனர். இப்போது நிர்ணயிக்கப்பட்ட கால பணிமுறையை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் பணியாளர்களை தேவையான காலத்திற்கு மட்டும் வேலைக்கு எடுத்துக் கொண்டு வேலை முடிந்ததும் வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியும். இதனால் அவர்களுக்கு ஊதிய உயர்வு, பணிக் கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த உரிமைகளும் வழங்கத் தேவையில்லை. ஒரு தொழிற்சாலையில் ஒருவர் 3 மாதங்களுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டிருந்தால் அந்தக் காலம் முடிந்த பின்னர், அவருக்கு எந்த சலுகையும் வழங்காமல் அவரை பணியிலிருந்து விடுவிக்க முடியும்.

ஒரு தொழிலாளி ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டு கால ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்பட்டிருந்தால், அவரை முதல் முதல் 3 மாதங்களில் எந்த அவகாசமும் வழங்காமல் பணி நீக்கக் கடிதம் கொடுத்து அனுப்பி வைக்க முடியும். ஒரு வேளை மூன்று மாதங்களுக்கும் மேல் ஒருவர் பணியாற்றி வருகிறாஎ என்றால், அவருக்கு பணி நீக்க அறிவிக்கை கொடுத்து அடுத்த இரு வாரங்களில் நீக்க முடியும். அவ்வாறு பணி நீக்கப்பட்டவர்களுக்கு அடுத்த வேலை எப்போது கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அமைப்புசாராத் துறைகளைச் சேர்ந்தவர்கள் காலையில் ஏதேனும் ஓர் இடத்தில் கூடி, எவரேனும் முகவர்கள் தங்களை வேலைக்கு அழைத்துச் செல்வார்களா? என்று காத்திருப்பதைப் போல, பணி நீக்கப்பட்டவர்களும் வேலைக்காக வீதிகளில் காத்திருக்கும் நிலை உருவாகும்.

நிர்ணயிக்கப்பட்ட கால பணிமுறை என்பது புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்று கருத முடியாது. நிறுவனங்களும், முதலாளிகளும் நினைத்தால் நிரந்தர பணியில் இருக்கும் எவரையும் ஏதேனும் காரணம் கூறி நீக்கி விட்டு, அவர்களை நிர்ணயிக்கப்பட்ட கால பணிமுறையில் குறைந்த ஊதியத்தில் மீண்டும் பணியமர்த்தி கொத்தடிமைகளாக மாற்ற முடியும். இந்த நிலை நீடித்தால் இனிவரும் காலங்களில் சமூக அமைதிக்கும், பொது ஒழுங்குக்கும் ஆபத்து ஏற்படக்கூடும். ஓர் அரசு, தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து தொழிலாளர்களை ஒழிக்கும் கருவியாக மாறிவிடக் கூடாது. எனவே, மிகவும் ஆபத்தான ‘‘நிர்ணயிக்கப்பட்ட கால பணிமுறை’’யை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தி உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க