''உலகத் தமிழ் இணைய மாநாடு..!''  கோவையில் மூன்று நாள்கள் நடக்கிறது

உலகத் தமிழ் இணைய மாநாடு

 

உத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17-வது உலகத் தமிழ் இணைய மாநாடு, ஜூலை 6,7,8 ஆகிய நாள்களில், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ்க்கணிமை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கின்றனர். மேலும், மக்கள் அரங்கம் என்ற செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ( ரூ.600 அரை நாள் பயிற்சி, ரூ. 900 முழு நாள் பயிற்சி)  இதனுடன் ஒரு நிரலாக்கத் திருவிழாவும் உள்ளது (இலவசம்). இதில், ஏதேனும் ஒரு கணினி மொழி நிரலாக்கம் தெரிந்தோர் கலந்துகொண்டு, தமிழுக்கான ஏதேனும் ஒரு கணியத்தை (மென்பொருளை) உருவாக்கலாம். சிறந்த கணியத்திற்குப் (மென்பொருளுக்கு) பரிசுகள் உண்டு.

செயற்முறைப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோரே, மடிக்கணினி கொண்டுவர வேண்டும். உருவாக்கும் கணியத்தை (மென்பொருளை) கட்டற்ற கணியமாக (மென்பொருளாக) மூலநிரலுடன் வெளியிட வேண்டும். இது தவிர, கண்காட்சி அரங்கில் பல்வேறு நிறுவனங்களின் கணிய (மென்பொருள்) அறிமுகம், தமிழ்க்கணினி தொடர்பான உரைகள் நடைபெற உள்ளன. இவற்றில் பொது மக்கள் இலவசமாகவே கலந்துகொள்ளலாம். 6-ம் தேதி தொடக்க விழாவில் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உதயசந்திரன், தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் ராமசாமி, குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரி இணைத் தாளாளர் சங்கர் வானவராயர் உள்பட பலர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!