கோலாகலமாகத் தொடங்கியது திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பத்திருவிழா!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில், தெப்பத்திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. ஜூலை 5,6,7 ஆகிய மூன்று நாள்கள் இத்திருவிழா நடக்கவிருக்கிறது.

தெப்பத்திருவிழா

சப்தவிடங்கர் தலங்களில் முதன்மையானதும், நிலத்துக்குரிய தலமாகவும் விளங்குவது திருவாரூர். வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தலத்தில் கோயிலுக்கு இணையான நிலப்பரப்புகொண்டது கோயில் திருக்குளம். கமலாலயம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. (கமலம் - தாமரை). உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேர் திருவிழா, 2018 மே 27 - ம் தேதி நடைபெற்றது. பங்குனி உத்திரப் பெருவிழாவின் நிறைவுத்திருவிழாவான தெப்பத் திருவிழா இப்போது தொடங்கியுள்ளது.

தெப்பத்திருவிழா
 

425 பேரல்களை இரண்டு அடுக்குகளாக வைத்து, 36 அடி உயரத்தில் 14 தூண்களுடன் மூன்றடுக்கு மாளிகைபோல அமைக்கப்பட்டுள்ளது தெப்பம். 400 பேர் அமரும் வண்ணம் தெப்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.தியாகராஜர், கமலாம்பாள்,  நீலோத்பலாம்பாள், விநாயகர், முருகன் ஆகிய கடவுள்களின் பொம்மைகளோடு தெப்பம்  அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒருநாளைக்கு மூன்று சுற்றுகள் வீதம், மொத்தம் மூன்று நாள்களுக்கு ஒன்பது சுற்றுகள் கமலாலயக் குளத்தை தெப்பம் சுற்றிவரும். நேற்றைய தினம் வெள்ளோட்டம் முடிந்தது. பார்வதி அம்பாள் சமேத கல்யாண சுந்தரேசுவரர், இரவு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து, காலையில் கோயிலுக்குள் செல்கிறார். மூன்று நாள்களும் தெப்பத்தில் இந்நிகழ்ச்சி நடக்கும். திருவாரூர் பெரிய கோயில் நிர்வாகத்துடன் இணைந்து, ஆரூரான் சர்க்கரை ஆலை ஊழியர்கள் தெப்பத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!