”பொட்டு வைத்து நடித்ததால் எனது மகளை நீக்கிவிட்டார்கள்” -மதரசா மீது குற்றம் சாட்டும் தந்தை!

ஷார்ட் ஃபிலிமில் சந்தனப்பொட்டு வைத்து நடித்த இஸ்லாமிய சிறுமியை மதரசா மத பாடசாலையில் இருந்து நீக்கிய விவகாரம் கேரளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹென்னா மலயில்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் உம்மர் மலயில் என்பவருடைய மகள் ஹென்னா மலயில். 5-ம் வகுப்பு படித்துவரும் ஹென்னா மலயில், கலைகள்மீது அதீத ஆர்வம் கொண்டவர். பள்ளிப் படிப்பில் முதலிடம் பிடித்துவருவதுடன் இஸ்லாமிய மத பாடசாலையான மதரசாவிலும் ஆர்வமாகப் பயின்றுவந்தார். இந்த நிலையில், ஒரு குறும்படத்தில் இந்துப் பெண்ணாக நடித்திருக்கிறார் ஹென்னா மலயில். உம்மர் மலயில்அந்தக் குறும்படத்தில், அவர் சந்தனப்பொட்டு வைத்து இந்துப் பெண்ணாக நடித்திருந்தார். அதில் குத்து விளக்கு ஏற்றுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. ரம்ஜான் விடுமுறை சமயத்தில் அந்தக் குறும்படம் வெளியாகியிருக்கிறது.

பொட்டுவைப்பது, விளக்கேற்றுவதுபோன்றவை மத கோட்பாடுகளுக்கு மாறானது எனக் கூறி, ஹென்னா மலயில் மதரசாவிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹென்னா மலயிலின் தந்தை உம்மர் மலயில், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து கருத்து பதிவுசெய்திருக்கிறார். அதில், "எனது மகள் பாட்டு, பேச்சு மற்றும் நடனத்தில் அதீத ஆர்வம் கொண்டவள். அத்துடன் பள்ளிப் படிப்பிலும், மத பாடசாலையிலும் எப்போதும் முதலிடம் பிடித்துவருகிறாள். நடந்து முடிந்த 5-ம் வகுப்பு மதரசா பொதுத்தேர்வில் 5-ம் இடம் பிடித்தாள். அவள், ஷார்ட் ஃபிலிமில் பொட்டுவைத்துக்கொண்டு நடித்ததால் அவளை மத பாடசாலையில் இருந்து நீக்கிவிட்டார்கள்" எனப் பதிவுசெய்திருக்கிறார். இந்தச் சம்பவம் கேரளத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!