’’சிறார் இலக்கியம் வளர்வதற்கான காலம் இது!’’ - பால சாகித்ய விருது வென்ற கிருங்கை சேதுபதி | Interview with 'Bal Sahitya Puraskar' winner kirungai sethupathi

வெளியிடப்பட்ட நேரம்: 10:16 (06/07/2018)

கடைசி தொடர்பு:14:29 (07/07/2018)

’’சிறார் இலக்கியம் வளர்வதற்கான காலம் இது!’’ - பால சாகித்ய விருது வென்ற கிருங்கை சேதுபதி

குழந்தைமை வேறு... சிறார் பருவம் வேறு. சிற்றிளம்பருவத்தைக் `குழந்தைமை' என்றும், அதற்கும் பேரிளம்பருவத்துக்கும் இடைப்பட்ட பருவத்தை `சிறார் பருவம்' என்றும்கொள்ளலாம்.

’’சிறார் இலக்கியம் வளர்வதற்கான காலம் இது!’’ - பால சாகித்ய விருது வென்ற கிருங்கை சேதுபதி

2018-ம் ஆண்டுக்கான பால சாகித்ய விருது, `சிறகு முளைத்த யானை' என்ற குழந்தைப் பாடல்கள் நூலுக்காக கிருங்கை சேதுபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உரையாடும் ஒவ்வொரு பொழுதையும் உற்சாகமாக்கும் சேதுபதி, கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். விருது பெறவிருக்கும் வெற்றியாளரைத் தொடர்புகொண்டபோது, மிகுந்த உற்சாகமாக உரையாடினார். 

``விருது தொடர்பான சர்ச்சைகள் வந்துகொண்டே இருக்கின்றனவே?”

``அப்படி வந்தால்தான் அவை `விருதுகள்' எனப்படும். விருதுகளைவிடவும் எழுதுபவர்கள் எண்ணிக்கையில் அதிகம் என்பதும் ஒரு காரணம். சர்ச்சை இல்லாவிடில், இப்படி ஒரு நிகழ்வு நடப்பதே தெரியாமல் போய்விடும் என்பதற்காகவும் இருக்கலாம். ஆனால், குழந்தை இலக்கியத் துறையில், `பால சாகித்ய விருது’ வழங்கப்படும்போது அப்படியான சர்ச்சைகள் எழுந்ததில்லை. இது மிகவும் ஆரோக்கியமானது.”

``சிறுவர் இலக்கியமும் குழந்தை இலக்கியமும் ஒன்றுதானா... இரண்டுக்கும் என்ன வரையறை இருக்கிறது?”

`` `Children's Literature' என்பதன் தமிழாக்கம் இது. 3 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறார்களுக்குரிய இலக்கியம் இது. ஆனாலும், குழந்தைமை வேறு... சிறார் பருவம் வேறு. சிற்றிளம்பருவத்தைக் `குழந்தைமை' என்றும், அதற்கும் பேரிளம்பருவத்துக்கும் இடைப்பட்ட பருவத்தை `சிறார் பருவம்' என்றும்கொள்ளலாம். ஆண், பெண் மற்றும் அஃதல்லாத பால் என அனைவருக்கும் பொதுமையாய், குழந்தை, சிறார் என்ற சொற்களைக் கையாள்கிறோம். பொதுமை கருதி, சிறுவர் இலக்கியம் என்கிற சொற்பயன்பாட்டைத் தவிர்த்துவிடுகிறோம்.”

``கவனிக்கத்தக்க குழந்தை இலக்கியங்கள் தமிழில் உருவாவதில்லையே... அதற்கு என்ன காரணம்? இந்தத் துறையில் எவரும் ஆர்வம் காட்டுவதில்லையே ஏன் ?”

``ஒருகாலத்தில் ஓகோ என வளர்ந்த இந்தத் துறை, இடையில் பெரிதும் தளர்வெய்தி, இப்போது மெள்ளத் தளிர்நடை போட ஆரம்பித்திருக்கிறது. காரணம், `பாடப்புத்தகங்களே போதும்’ எனக் கருதும் ஒரு போக்கு, கிரகணம்போல் சூழ்ந்திருந்தது. அது இப்போது விலக ஆரம்பித்திருக்கிறது. பதிப்பாளர்களும் படைப்பாளர்களும் மனம்வைத்தால் மட்டும்போதாது, பெற்றோர்களும் ஆர்வலர்களும் மிகுந்த கவனம் செலுத்தினால் மட்டுமே, சிறார் இலக்கியம் வளர்ச்சி பெறும்.

நவீன இலக்கியத்துக்கு, தமிழ்நாடு பாடப்புத்தக அமைப்புக் குழு முன்பைவிட அதிக கவனம் செலுத்தியிருப்பது, வளர்ச்சிக்கான வாசல்களைத் திறந்துள்ளதாகப்படுகிறது. அது இன்னும் விரிவும் செறிவும்கொண்டு அமைய, பலன்கள் மிகலாம்.”

சேதுபதி

``தமிழில் குழந்தை இலக்கியத்துக்கான புள்ளி எங்கிருந்து ஆரம்பித்தது?”

``அவரவர் தம் `தாய்மொழி’யிலிருந்து, தாய் பேசும் மொழியில், பாடும் தாலாட்டிலிருந்து, வள்ளுவப் பேராசான் குழலையும் யாழையும் ஒதுக்கிவிட்டுக் கொண்டாடும் `மழலை’யிலிருந்து, `வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பதாகச் சொல்லப்படும் கலைமகள் எங்கே இருக்கிறாள்?' என்ற கேள்விக்கு, `மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்’ என்று பாரதி பாடுகிறாரே... அங்கே இருந்து, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, அழ.வள்ளியப்பா போன்ற முன்னோடிகளிலிருந்து… அந்த மனமும் குணமும் மாறாத உள்ளங்களிலிருந்து… எப்போதும் எங்கேயும் குழந்தை இலக்கியத்துக்கான புள்ளி ஆரம்பித்துக்கொண்டே இருக்கிறது.”

“கல்விப்புலத்தில் இருப்பதால் கேட்கிறேன். இன்றைய மாணவர்கள் மீது கல்வி சார்ந்து அதீதமான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றனவே... அதற்கான தீர்வுதான் என்ன?” 

``பணம் பண்ணும் தொழிலாக, கல்வி இன்று ஆக்கப்பட்டுள்ளது. கற்றுக்கொள்வது, இரண்டாம்பட்சமாகிவிட்டது. ரேஸ் குதிரையின்மீது பணம் கட்டுவதுபோல், பிள்ளைகளின் படிப்புக்காக பெற்றோர்கள் நிறைய பணம் செலுத்துகிறார்கள். குடும்பப் பாரத்தை, புத்தகப்பைபோல அவர்கள் முதுகில் சுமத்திவிடுகிறார்கள். எனவே, போட்டிகள் செயற்கையாக உருவாக்கப்படுகின்றன; நிர்பந்தங்கள் கட்டாயமாக வார்த்தெடுக்கப்படுகின்றன.

உண்மையைச் சொல்லப்போனால், இது போட்டிகள் நிறைந்த உலகம் அல்ல; வாய்ப்புகள் நிறைந்த உலகம். கற்றிருந்தால்தான் கால் ஊன்ற முடியும் என்கிற அனுபவ உண்மையை எல்லோரும் அறிய வேண்டும். `தனக்கு எது பிடிக்கும்?’, `தான் எதைச் செய்யவேண்டும்?’ என்கிற சுயசிந்தனை வளராத வரை இந்தப் பிரச்னை நீடிக்கும். இந்தச் சுயசிந்தனையை வளர்ப்பது தாய்மொழிக் கல்வி ஒன்றுதான். அதற்கு வாய்ப்பு இல்லாதவரை, இத்தகைய போக்குகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்குமே தவிர, குறையாது.” 

``மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரிக்கின்றனவே. உங்கள் கருத்து என்ன?”

``மாணவர்கள் மட்டுமா... இதில் மற்றவர்களுக்குப் பங்கு இல்லையா என்ன? அவர்கள் அப்படி ஈடுபடாமல் இருக்க, தன் உணர்ச்சிகளை நேர்நிலையாக (Positve), வெளிப்படுத்திக்கொள்ள கலையும் இலக்கியமுமே சரியான களங்கள். கவிதை, பாட்டு, ஓவியம், இசை, நாடகம் இவையெல்லாம் கூடிக்கலந்த கலவையாக வரும் சிறிய, பெரிய திரைச் சித்திரங்களில் இத்தகு வன்முறைக் காட்சிகள் வெகுசாதாரணமாக இடம்பெறும்போது, பிஞ்சுக்குழந்தைகளின் நெஞ்சங்களில் வன்முறை உருக்கொள்ளாமல் எப்படி இருக்கும்?

எல்லோரது வீடுகளிலும் நிரந்தர உறுப்பினராக இருக்கும் இந்தப் பெட்டி, `ஓடுகிறது; ஆடுகிறது; பாடுகிறது; எதை எதையோ தேடுகிறது. ஓடவும், ஆடவும், பாடவும், தேடவும்வேண்டிய குழந்தை, காட்சிப்பொருள்போல் வெறுமனே அதன்முன் உட்காரவைக்கப்பட்டிருக்கிறது. இதைவிட வேறென்ன வேண்டும்? இப்போது `கைபேசிகள் வேறு!”

``இதற்கு முடிவுதான் என்ன?”

``தொடக்கம்தான் முடிவும். `என்ன இருந்தாலும் நான் எல்லாவற்றையும் பார்க்கவேண்டியதில்லை; வேண்டாம்’ என்று சொல்கிற அல்லது செயல்படுகிற பெற்றோர்களால்தான் இதை மாற்ற முடியும்.”


டிரெண்டிங் @ விகடன்