வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (06/07/2018)

கடைசி தொடர்பு:11:00 (06/07/2018)

`நாங்க எங்கப் போவோம்..!' - கதறும் கூலித்தொழிலாளர்களின் குடும்பங்கள்

திருச்சி காந்தி மார்க்கெட் மாற்ற விவகாரம் உச்சத்தில் உள்ளது. இடநெருக்கடி, போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி 149 வருட பழைமையான திருச்சி காந்தி மார்க்கெட்-ஐ  திருச்சி மணிகண்டம் அருகே புதிய மார்க்கெட் பகுதிக்கு இடமாற்ற அரசு முடிவெடுத்தது. புதிய மார்க்கெட்-ஐ எதிர்த்து வியாபாரிகள் போராடி வந்தனர். இந்நிலையில் அருகே உள்ள சிறைச்சாலை சாலையில் இயங்கிவந்த வெங்காய மண்டிக்குப் பதிலாக கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, திருச்சி பழைய பால்பண்ணை அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் வணிக வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. காந்தி மார்க்கெட் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம், இனி மார்க்கெட் இயங்காது எனக் கறார் காட்டி வருகிறது.

தொழிலாளர்கள்

இந்நிலையில் ஏற்கனவே திருச்சி காந்தி மார்க்கெட் சப்–ஜெயில் சாலையில் இருந்த வெங்காய மண்டிகளில் ஏற்கனவே பணியாற்றிய சுமை தூக்கும் தொழிலாளர்களையே புதிய வெங்காய மண்டியிலும் பணிக்கு அமர்த்த வேண்டும் என்று வியாபாரிகளிடம் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் வியாபாரிகளோ, ஏற்கனவே பணியாற்றி வந்த தொழிலாளர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலைத் தர முடியும் என்றும், அப்படி வேலையில் சேருபவர்களும் சங்கம் சேர்ந்து கொண்டு வேலை நிறுத்தம், கூலி உயர்வு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தனர். இதனால் வியாபாரிகள் தரப்பினருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்னை உண்டானது.

இந்நிலையில் கடந்த 4-ம் தேதி சுமைதூக்கும், தொழிலாளர்கள் பலர் புதிய வெங்காய மண்டியில் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று புதிய வெங்காய மண்டியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 117 பேர் கைது செய்யப்பட்டனர்.

அடுத்து, நேற்று புதிய வெங்காய மண்டியில் ஏற்கனவே பணியாற்றிய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கக்கோரியும், போலீசாரின் இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்தும்,  சி.ஐ.டி.யூ, தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் பழைய வெங்காய மண்டியில் இருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின்  குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் சுமார் 300–க்கும் மேற்பட்டவர்கள் புதிய வெங்காய மண்டிப் பகுதியில் உள்ள சாலையோரம் ஓரம் அமர்ந்தபடி, ‘புதிய வெங்காய மண்டியில் 276 சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் எந்த வித நிபந்தனையும் இன்றி வேலை வழங்க வேண்டும். அதுவரை நாங்கள் இந்த இடத்தை விட்ட போக மாட்டோம். புதிய வெங்காய மண்டியில் சங்கத்தைச் சேராத தொழிலாளர்களுக்கு வேலை வழங்காமல் நிறுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்டக்  கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கோட்டைப் பகுதி காவல்துறை உதவி ஆணையர் பெரியண்ணன், திருச்சி கிழக்கு தாசில்தார் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்திய தொழிற்சங்த் தலைவர்களான தொ.மு.ச சங்கத்தைச் சேர்ந்த ராமலிங்கம், சி.ஐ.டி.யூ சங்கத்தைச் சேர்ந்த ராஜா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடந்தாலும் போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. ஒரு கட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், இவ்வளவு வருடமாக இந்த வேலையைச் செய்த நாங்கள் எங்க போவோம். எங்க குடும்பங்கள் வீதியில் நிற்பதா எனக் கதறியதுடன் புதிய வெங்காய மண்டியை முற்றுகையிடப் போவதாக கூறி ஆவேசமாகக் கிளம்பினார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

காவல்துறை அதிகாரிகள் தொழிற்சங்க நிர்வாகிகளிடம், இப்பிரச்சினை குறித்து காலை, திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராக்  முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யலாம். அதுவரை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் நள்ளிரவில் கலைந்து சென்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று வியாபாரிகள், தொழிலாளர்கள் உடனான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. இதனால் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி பரபரப்பாகவே உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க