வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (06/07/2018)

கடைசி தொடர்பு:12:15 (06/07/2018)

மகாராஷ்டிராவில் தடம்புரண்ட மதுரை எக்ஸ்பிரஸ்! காயமின்றித் தப்பிய பயணிகள்!

மதுரையிலிருந்து மும்பை நோக்கி சென்றுகொண்டிருந்த லோகமான்ய திலக் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தடம்புரண்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

 

மதுரை எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது

மதுரையிலிருந்து மும்பை நோக்கி சென்றுகொண்டிருந்த லோகமான்ய திலக் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தடம்புரண்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

மதுரை-மும்பை இடையே இயங்கிவரும் லோகமான்ய திலக்-மதுரை எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை 3.30 மணிக்கு புனே நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது, மகாராஷ்டிரா மாநிலத்தில் கண்டாலா என்னும் இடத்தில் சென்றபோது, அந்த ரயிலின் சீட்டிங் கம் லக்கேஜிங் (எஸ்.எல்.ஆர்) பெட்டி திடீரென தடம்புரண்டது. தண்டவாளத்தில் இருந்து அந்தப் பெட்டி தரையிறங்கியதால், தரையில் மோதி சாய்ந்தது. 

ரயில் விபத்து

அப்போது ஏற்பட்ட பலத்த சத்தம் காரணமாக, அயர்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து எழுந்தார்கள். உடனடியாக அதே இடத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு சிறிய காயம்கூட ஏற்படவில்லை. உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ரயில்வே நிர்வாகம், தடம்புரண்ட பெட்டியை மட்டும் கழற்றிவிட்டு, ரயிலை மீண்டும் இயக்கியது. சுமார் ஒரு மணி நேரத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், பயணிகள் நிம்மதியடைந்தார்கள். 

தடம் புரண்ட ரயில்

இந்த விபத்து காரணமாக, புனே-மும்பை இடையேயான ரயில் சேவையில் 20 முதல் 30 நிமிடங்கள் பாதிப்பு ஏற்பட்டது. சில ரயில்கள் தாமதமாக இயங்கின. சில ரயில்களை ரத்துசெய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக,  மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’51317/51318 கர்ஜாட்- புனே-கர்ஜாட் பயணிகள் ரயில், 12127/12128 மும்பை-புனே-மும்பை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், 11010/11009 புனே-மும்பை-புனே சிங்ககாட் எக்ஸ்பிரஸ், 12126/12125 புனே-மும்பை-புனே பிரகதி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்துசெய்யப்படுகின்றன. 

இது தவிர, 11025 மன்மாட் மற்றும் டவுன்ட் வழியாகச் செல்லக்கூடிய  புசாவால்-புனே எக்ஸ்பிரஸ் ரயில், மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகிறது. பிற ரயில்களில் சிறிய தாமதம் ஏற்பட்ட போதிலும் வேறு மாற்றம் எதுவும் இல்லை’ என மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.