ராகுல் காந்தி மீது சுப்பிரமணியன் சுவாமி பகீர் புகார்! 

 

சுப்பிரமணியன் சுவாமி

பஞ்சாப் மாநிலத்தில், அம்ரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு, போதைப் பொருள் கடத்துவது, விற்பனைசெய்து, உபயோகப்படுத்துவது போன்ற குற்றங்கள் அதிகரித்துவருகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதைத் தடுக்க, காங்கிரஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை கொடுக்க முடிவெடுத்து, அதற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், ''அரசு ஊழியர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதில், போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்'' என்று மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அதிரடித் திட்டம், நாடு முழுவதும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

ராகுல் காந்தி

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ''எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்களுக்கும் இந்த போதைப்பொருள் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அளித்த பேட்டியில், ''பாதல் கூறியதை நான் வரவேற்கிறேன். 70 சதவிகித பஞ்சாபிகள், போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள் என்று அவர் சொன்னாரே தவிர, அவர் ராகுல் காந்தி பற்றி சொல்லவில்லை. ராகுல்காந்தி கொக்கையின் பயன்படுத்துகிறார். போதை மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டால், அவர் நிச்சயம் தோல்வியடைவார்'' என்று கூறியுள்ளார்.

அமித் ஷாவுக்கு எதிராக, 'சொராபுதீன் என்கவுன்ட்டர், அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அதிக பணம் டெபாசிட் செய்யப்பட்டது' போன்றவைகுறித்து போலீஸ் நிலையங்களில் காங்கிரஸ் கட்சியினர் புகார் கொடுக்கும் போராட்டம் நடத்திவரும் நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!