வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (06/07/2018)

கடைசி தொடர்பு:14:56 (06/07/2018)

`தலைமை நீதிபதிக்கே முழு அதிகாரம்' - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

`வழக்குகளை ஒதுக்கீடுசெய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டும்தான் உள்ளது' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சாந்தி பூஷண் தாக்கல்செய்த பொதுநல மனு விசாரணையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார், சாந்தி பூஷண். அந்த மனுவில், `உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் விதிமுறைகள் வழங்க வேண்டும். அதேபோன்று, நீதிபதிகள் அடங்கிய அமர்வுகளை உருவாக்கவும் விதிமுறைகளை வகுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், வழக்குகளை ஒதுக்கீடுசெய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உள்ளது. ஆகையால், உச்ச நீதிமன்றத்தில் ஒதுக்கப்படும் வழக்குகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இது சரியான முறையல்ல' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  `நீதிபதிகள் அனைவருக்கும் தலைமை நீதிபதிதான் தலைவர். மேலும், வழக்குகளை ஒதுக்கீடுசெய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டும்தான் உள்ளது' என்று கூறி மனுவைத் தள்ளுபடிசெய்தனர் நீதிபதிகள்.