வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (06/07/2018)

கடைசி தொடர்பு:14:20 (06/07/2018)

சான்றிதழ்களைத் தொலைத்த மாணவனுக்கு உதவ முன்வந்த நீதிபதி வைத்தியநாதன்!

சான்றிதழ்களைத் தொலைத்ததால், மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்ளமுடியாமல் தவிக்கும் பூபதி ராஜா என்ற ஏழை மாணவனுக்கு உதவும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அரசு தரப்பும் உதவ முன்வந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், புதுப்பட்டியைச் சேர்ந்த மாணவர் பூபதிராஜா. ப்ளஸ் டூவில் 1,114 மதிப்பெண்ணும், நீட் தேர்வில்  236 மதிப்பெண்ணும் எடுத்துள்ள நிலையில், அவருடைய தந்தை முன்னாள் ராணுவ வீரர் என்பதால், அதற்கான ஒதுக்கீட்டில்  மருத்துக்கல்விக்கான கலந்தாய்வுக்கு தன் மாமாவுடன் சென்னைக்கு வரும்போது,  கல்விச் சான்றிதழ் உட்பட அனைத்து சான்றிதழ்களும் வைத்திருந்த பையை ரயில் நிலையத்தில் யாரோ திருடிவிட்டார்கள்.  காவல்துறையில் புகார் கொடுத்துள்ள நிலையில், சான்றிதழ்கள் இல்லாததால் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்த மாணவனைப் பற்றிய தகவல்கள், சமூக ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் வரத் தொடங்கின. 

சான்றிதழ்

சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி வைத்தியநாதன் இந்தச் செய்தியை அறிந்து, அரசின் தலைமை வழக்கறிஞரிடம் மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்ள அந்த மாணவருக்கு அரசு உதவ வேண்டும் என்று வாய்மொழி உத்தரவிட்டார். இந்த நிலையில், நேற்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வைத்தியநாதனிடம் விளக்கமளித்த அரசு வழக்கறிஞர், 'மாணவன் பூபதிராஜாவுக்கு அனைத்து நகல் சான்றிதழ்களையும் வழங்கி, அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது. அனால், அந்த  மாணவர் தரப்பில் இதுவரை யாரும் அரசை அணுகவில்லை'' என்றார். இந்த நிலையில், மாணவர் பூபதிராஜா இன்று அரசு அதிகாரிகளை அணுகுவார் என்று சொல்லப்படுகிறது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க