'ஒரு வருடமாகச் சேர்ந்து வாழ்க்கை'- காதலித்த வாலிபர் கைவிட்டதால் உயிரை விட்ட திருநங்கை!

ஒரு வருடமாகச் சேர்ந்து வாழ்ந்தநிலையில், காதலித்த வாலிபர் கைவிட்டதால் திருநங்கை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநங்கை

ஈரோட்டை பூர்வீகமாகக்கொண்டவர் கார்த்திக். 25 வயதான இவர், கடந்த 5 வருடங்களுக்கு முன்புதான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்தார். ஐ.டி.ஐ படித்த இவர், தன்னை ஏற்க மறுத்த உறவுகளிடமிருந்து விலக நினைத்து, அஷிகாவாக மாறி, புதுச்சேரியில் குடியேறினார். அரியாங்குப்பம், காக்காயந்தோப்பில் தன்னைப்போல இருந்த திருநங்கைகளுடன் வசித்துவந்தார். அப்போது, ஆட்டுப்பட்டியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைக் காதலித்துவந்தார். கடந்த ஒரு வருடமாக, அஷிகா வீட்டில் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாள்களாக அஷிகா வீட்டுக்குச் செல்வதை அந்த வாலிபர் தவிர்த்திருக்கிறார். அதனால் விரக்தியடைந்த அஷிகா, வீட்டைவிட்டு வெளியே வராமல் அழுதுகொண்டிருந்திருக்கிறார்.

கடந்த புதன் கிழமை, புதிய ஆடைகள் மற்றும் நகைகளை அணிந்து, அழகாகத் தன்னை அலங்கரித்துக்கொண்டு, தனது சக திருநங்கை தோழியர்களைச் சந்தித்திருக்கிறார். அப்போது அவர்களிடம், ’நான் எப்படி இருக்கேன்? அழகா இருக்கேனா? என்றெல்லாம் கேட்டு அவர்களுடன் சிரித்துப் பேசியிருக்கிறார். அதன்பின் வீட்டுக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் வெளியில் வரவில்லை. சந்தேகமடைந்த சக திருநங்கைகள், அஷிகா பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறார்கள். அப்போதும் பதில் ஒன்றும் வராததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றிருக்கிறார். அங்கே உயிரற்ற சடலமாக தூக்கில் தொங்கினார் அஷிகா. அதன்பின், அவரை அடக்கம்செய்த திருநங்கைகள், முன்னதாக அவரது கண்களை அரசு மருத்துவமனைக்குத் தானமாக வழங்கினர்.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!