' கூட்டணிக்குள் தி.மு.க வந்தாக வேண்டும்!'  - நாமக்கல் ரெய்டும் அமித் ஷா ஆட்டமும் 

'அ.தி.மு.க கூட்டணியை இரண்டாவது ஆப்ஷனாகவும் தி.மு.க கூட்டணியை பிரதான ஆப்ஷனாகவும் பார்க்கிறார் அமித் ஷா. இதன் ஒருகட்டமாகத்தான், இந்த ரெய்டு நடந்துள்ளது' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள்.

' கூட்டணிக்குள் தி.மு.க வந்தாக வேண்டும்!'  - நாமக்கல் ரெய்டும் அமித் ஷா ஆட்டமும் 

மிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில் நடந்துவரும் ஊழலை வெளிக்கொண்டு வந்ததன் மூலம் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறார் அமித் ஷா.  ' இது ஓர் ஊழல் அரசு என்பதை வெளிக்காட்டுவதன் மூலம், தி.மு.கவைக் கூட்டணிக்குள் கொண்டு வரும் வேலைகளும் நடக்கத் தொடங்கியுள்ளன. இதற்கான பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் தமிழிசை' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இயங்கி வரும் கிறிஸ்டி ஃபிரைடு கிராம் இண்டஸ்டரி நிறுவனத்தை குறிவைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். கோவை, சேலம், பெங்களூரு என 76 இடங்களில் நடந்த ஐ.டி அதிகாரிகளின் தேடுதல் வேட்டை, ஆளும்கட்சி வட்டாரத்தை உலுக்கியிருக்கிறது. நாமக்கல் வட்டூரில் உள்ள கிறிஸ்டி உரிமையாளர் குமாரசாமியின் வீடு, அந்த நிறுவனத்தின் ஆடிட்டர்கள் வீடு, உறவினர்கள் வீடு, தொழிற்சாலை என அனைத்து இடங்களையும் ஒன்றுவிடாமல் குடைந்தனர். ' போலியான நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் மூலமாக போலியாக கணக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். 15 கோடி ரூபாய் வரையில் வரிஏய்ப்பு நடந்துள்ளது. இந்த ரெய்டில் வங்கிக் கணக்கு விவரங்கள், போலியான கணக்கு ஆவணங்கள் சிக்கியுள்ளன. இவற்றை ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன' எனத் தெரிவித்துள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள். இந்த ரெய்டு குறித்து ஆளும்கட்சி தரப்பில் பேசியபோது, " கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கார்டனுக்கு மிக நெருக்கமான நட்பு வளையத்தில் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் இருந்தது. எடப்பாடி பழனிசாமியின் நட்பு வளையத்தில் குமாரசாமி இருக்கிறார். அ.தி.மு.கவுக்குள் நடக்கும் உள்கட்சி மோதலின் விளைவாக எடப்பாடி பழனிசாமிக்குச் செக் வைப்பதற்காக இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கலாம். கிறிஸ்டி விவகாரம் உருவாக்கப் போகும் விளைவுகள்தான் கொங்கு மண்டலத்தின் ஹாட் டாபிக்" என்கின்றனர். 

' மத்திய அரசுடன் இணக்கமாக உறவைக் கடைபிடித்து வரும் எடப்பாடி பழனிசாமி அரசைக் குறிவைக்க வேண்டிய அவசியம் என்ன?' என்ற கேள்வியை பா.ஜ.கவின் முக்கியத் தலைவர் ஒருவரிடம் கேட்டோம். " அ.தி.மு.க கூட்டணியை பா.ஜ.க இறுதி செய்யவில்லை என்று அர்த்தம். குழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்திலேயே பெரும் ஊழல் நடக்கிறது என்பதை பொதுமக்களுக்கு உணர்த்திவிட்டது இந்த ரெய்டு. இதன்மூலம் தி.மு.கவுக்குச் சில விஷயங்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் அமித் ஷா" என விவரித்தவர், " ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காலத்தில் இருந்தே தி.மு.க கூட்டணிக்கான முயற்சிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார் மாநிலத் தலைவர் தமிழிசை. ' ஆர்.கே.நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியைவிடவும் பா.ஜ.க பின்னடைவை சந்திக்கும். எனவே, தேர்தலை ரத்து செய்வோம்' என மேலிட நிர்வாகிகளுக்குத் தகவல் கொடுத்தார் தமிழிசை. இதன் அடிப்படையில் சில விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஸ்டாலினிடம் பேசிய தமிழிசை, ' ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.கவுக்கு டெபாசிட் பறிபோகும்' எனக் கூறிவிட்டு, ' தினகரன் கட்டாயம் வெற்றி பெறுவார். உங்களுக்கும் மோசமான பின்னடைவு ஏற்படும். அதற்குப் பதில், ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்திவிடலாம். நீங்கள் பா.ஜ.க கூட்டணிக்குள் வந்தால் போதும்' எனத் தெரிவித்திருக்கிறார். இதற்குப் பதில் கொடுத்த ஸ்டாலின், ' நீங்கள் கூறுவது நடக்காது. தினகரன் வெற்றி பெறுவார் என்பது நடக்கக் கூடிய காரியம் அல்ல. நாங்கள் கட்டாயம் வெற்றி பெறுவோம். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பேசுவோம்' என உறுதியாகக் கூறிவிட்டார். அந்தத் தேர்தலில் டெபாசிட்டைப் பறிகொடுத்தது தி.மு.க. 

கிறிஸ்டி நிறுவனம் 

இப்போது மீண்டும் தி.மு.கவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறார் தமிழிசை. அதற்கேற்ப, காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது குறித்து இதுவரையில் ஸ்டாலின் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. இதனைக் கவனித்த பா.ஜ.க தலைவர்கள், ' நம்முடைய அணிக்குள் தி.மு.க வர வேண்டும்' என உறுதியாகக் கூறிவிட்டனர். அ.தி.மு.க கூட்டணியை இரண்டாவது ஆப்ஷனாகவும் தி.மு.க கூட்டணியை பிரதான ஆப்ஷனாகவும் பா.ஜ.க பார்க்கிறது. இதன் ஒருகட்டமாகத்தான், 'எடப்பாடி பழனிசாமி அரசு ஊழல் அரசாங்கம்' எனக் காட்டுவதற்கு இந்த ரெய்டை நடத்தியுள்ளனர். 96-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிகாலத்தில் இருந்தே கிறிஸ்டி நிறுவனம் கோலோச்சி வருகிறது. இந்த ரெய்டின் மூலம் தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் ஒரே நேரத்தில் செக் வைக்கப்பட்டிருக்கிறது. 

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஸ்டாலினுக்காகத்தான் தினகரன் மீதான வழக்குகளை துரிதப்படுத்தாமல் உள்ளனர். ஆர்.கே.நகர் தேர்தல் சமயத்தில், ' மூன்று மாதத்தில் சிறைக்குப் போவார் தினகரன்' என ஸ்டாலின் பேசினார். இன்று வரையில் அது நடக்கவில்லை. இதற்குக் காரணம், தினகரன் சிறைக்குச் சென்றுவிட்டால், மோடி எதிர்ப்பில் கிடைக்கக் கூடிய 8 சதவீத வாக்குகளும் தி.மு.கவுக்குச் சென்று சேரும். இதனை பா.ஜ.க தலைமை விரும்பவில்லை. 'கூட்டணிக்குள் வருவதற்கு ஸ்டாலின் சம்மதித்தால், தினகரன் மீதான வழக்குகளை வேகப்படுத்தலாம்' என்ற முடிவில் உள்ளனர். இதுதான் பா.ஜ.கவின் அரசியல் நிலைப்பாடு. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை உருவாக்கும் முக்கிய கருவியாக தமிழிசையை முன்வைத்துள்ளனர். இந்த முயற்சிக்கு தி.மு.கவின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், ஸ்டாலின் சம்மதம் தெரிவிக்கவில்லை. 'நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவிவிட்டால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்; கனிமொழியின் கரம் வலுப்பெற்றுவிடும்' என நினைக்கிறார். அதனால்தான் யாருக்கும் எந்தப் பதிலையும் சொல்லாமல் மௌனம் காக்கிறார். தி.மு.கவுடனான கூட்டணி முயற்சிகளையும் தமிழிசையின் தூதுவர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்" என்றார் விரிவாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!