திருப்போரூரில் கட்டுக்கட்டாய் பணம்! அரசு நடவடிக்கையா.. நாடகமா?! | thiruporur sub registrar office raid

வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (06/07/2018)

கடைசி தொடர்பு:14:25 (07/07/2018)

திருப்போரூரில் கட்டுக்கட்டாய் பணம்! அரசு நடவடிக்கையா.. நாடகமா?!

திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 3.92 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருப்போரூரில் கட்டுக்கட்டாய் பணம்! அரசு நடவடிக்கையா.. நாடகமா?!

மிழக அரசுக்கு அதிக வருவாய் தரக்கூடிய துறைகளில் பதிவுத்துறை மிகவும் முக்கியமானது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளைப் பதிவுசெய்வதற்குத் தடை போன்ற பிரச்னைகளால் பதிவுத்துறை சற்றே தொய்வடைந்திருந்தாலும், சில முக்கிய நகரங்களில் இந்தத் துறையில் அதிகளவில் பணம் புழங்கும். குறிப்பாகச் சென்னைக்கு அருகே உள்ள திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் எப்போதும் பிஸியாகவே காணப்படும். கிழக்குக் கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை போன்ற இடங்களில் ஐ.டி. நிறுவனங்கள், பன்னாட்டுத் தொழில் சார்ந்த நிறுவனங்கள் அதிகளவில் இருப்பதால் இந்தப் பகுதிகளில் உள்ள நிலங்களின் மதிப்பு அதிகம். பத்திரம் பதிவுசெய்ய இந்தச் சார்பதிவாளர் அலுவலகம் வருபவர்கள் பென்ஸ் போன்ற விலை உயர்ந்த கார்களிலேயே வருவார்கள். இதனால், திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தைப் பொறுத்தவரை, கோடிக்கணக்கில் பணம் புரளும் இடமாக இருக்கிறது.

பதிவுத்துறையில் பணியாற்றுபவர்களிடையே திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்குப் பணிமாறுதல் கிடைப்பதற்குக் கடுமையான போட்டி இருக்கும். பெரிய தொகையைக் கப்பம் கட்டினாலும், அரசின் மேலிடத்து ஆசி இருந்தால்தான் இந்தச் சார்பதிவாளர் அலுவலகத்துக்குப் பதிவாளராக வரமுடியும். பெரிய அளவில் பணம் புழங்கினாலும் சிறிய அளவு தொகைக்கான பத்திரப்பதிவு செய்பவர்களும், அங்குள்ள அலுவலர்களுக்கு உரிய லஞ்சப் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருக்கிறது. இதனால் கொதிப்படைந்த பொதுமக்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். ஆனால், நடவடிக்கை ஏதும் இல்லாததால் அவர்கள் வெறுத்துப் போய் இருந்தார்கள். இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு திடீரென வந்து வாயிற்கதவைத் தாழிட்டனர். பத்திரப்பதிவு செய்யவந்தவர்கள், வில்லங்கச் சான்று பெற வந்தவர்கள் என அனைவரும் வெளியே செல்ல முடியாமல் அலுவலகத்துக்குள்ளேயே இருந்தனர். 

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

லஞ்ச ஒழிப்புத்துறை ஆலந்தூர் டி.எஸ்.பி, லவக்குமார் தலைமையில் 10 பேர் இந்த அலுவலகத்தைக் கண்காணித்து வந்ததாகச் சொல்கிறார்கள். ஆய்வின்போது கணக்கில் வராத 3.92 லட்சம் ரூபாய் பணத்தைக் கைப்பற்றிய அதிகாரிகள், அந்த அலுவலகத்தில் நள்ளிரவு 1.45 மணிவரை சோதனை நடத்தினர். 

``மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தீவிரமாகக் கண்காணித்து மாலை ஐந்து மணியளவில் இந்தப் பணத்தைப் பிடித்திருக்கிறோம். இந்தப் பணம் யாருடையது எனக் கேட்டால் என்னுடையது என ஒருவரும் சொல்லவில்லை. யாராவது சம்பந்தப்பட்ட அதிகாரிக்கோ அல்லது அலுவலர்களுக்கோ நேரடியாக லஞ்சம் கொடுக்கும்போது பிடித்தால் மட்டுமே அவர்களைக் கைதுசெய்ய முடியும். தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்” என லஞ்ச ஒழிப்புத் துறையினர் சொல்கிறார்கள்.

சார்பதிவாளர் அலுவலக வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ``மாலை 5 மணியிலிருந்து இரவு 1.45 மணிவரை நடந்த இந்தச் சோதனையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டரை இரண்டு முறை காரில் வெளியே அழைத்துச் சென்று வந்தார்கள். அதுபோல் சார்பதிவாளர் சம்பத்தையும் காரில் வெளியில் அழைத்துச் சென்று அரைமணி நேரம் கழித்து மீண்டும் அழைத்து வந்தார்கள். இவர்களை வெளியில் அழைத்துச் செல்லவேண்டிய காரணம் என்ன? 3.92 லட்சம் ரூபாய் என்பதெல்லாம் இந்த அலுவலகத்துக்கு மிகச் சாதாரணமான தொகை. ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் புழங்கும் என்பது இங்குள்ள எல்லோருக்கும் தெரியும். அடிமட்ட பணியாளர்கூட ஐம்பதாயிரம் இல்லாமல் வீட்டுக்குச் செல்லமாட்டார். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் யாரையும் கைது செய்யாமல் பணம் கைப்பற்றியிருப்பதால் எந்த அதிகாரிக்கும் பயம் வராது. லஞ்ச, லாவண்யங்கள் சிறிதும் குறையாது” என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்