`உனக்கு குழந்தை இருக்கிறது; சீட் கிடையாது' - கலந்தாய்வில் திருப்பி அனுப்பப்பட்ட மாணவி கண்ணீர்!

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில், கடந்த வியாழன் அன்று மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அப்போது, நான்கு மாதக் குழந்தையுடன் கலந்துகொண்ட கெளதமியிடம், குழந்தை வைத்திருக்கும் உன்னால் விடுமுறை எடுக்காமல் எப்படி கல்லூரிக்கு வந்து படிக்க முடியும் என்று கேள்வி எழுப்பி? உனக்கு சீட் கிடையாது என மறுத்துத் திருப்பி அனுப்பியுள்ளனர். கல்லூரியின் பொறுப்பு முதல்வர் செந்தில்குமாரின் இந்தச் செயல், பெண் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள தருமபுரி மாவட்டத்தில், அதுவும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் சொந்த ஊரில் உள்ள கல்லூரியில் நடத்துள்ள இந்தச் சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கலந்தாய்வில் திருப்பி அனுப்பப்பட்ட மாணவி, கணவர் மற்றும் குழந்தையுடன் உள்ளார்.

காரிமங்கலத்தை அடுத்துள்ள கொல்லக் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி கெளதமி, தருமபுரி தனியார் கல்லூரியில் பி.காம் படித்து முடித்துள்ளார். அவர் நம்மிடம் பேசியபோது, பெரியார் பல்கலைக்கழகத்தில் அந்த ஆண்டு 83.60 சதவிகித மதிப்பெண் எடுத்து பல்கலைக்கழக அளவில் மூன்றாம் இடம் பிடித்தேன். ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாகக் கல்லூரி இறுதி ஆண்டில் பெற்றோர் திருமணம் செய்துவைத்துவிட்டனர். பிறகு, கர்ப்பமடைந்ததால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. குழந்தையை வளர்ப்பதற்காக கடந்த ஒரு வருடம் வீட்டிலேயே இருந்துவிட்டேன். 

கல்லூரி விண்ணப்பம்

ஆனால், தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைப் புரிந்துகொண்ட கணவரின் சம்மதத்துடன் காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லூரில் எம்.காம் படிக்க விண்ணப்பித்தேன். ஆனால், கடந்த வியாழன் அன்று நடைபெற்ற கலந்தாய்வின்போது குழந்தையைக் கொண்டுசென்றேன். குழந்தை வைத்திருக்கும் உன்னால் எப்படி விடுமுறை எடுக்காமல் கல்லூரிக்கு வந்து படிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய முதல்வர் செந்தில்குமார், எம்.காம் சீட் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அருகே இருந்த பேராசிரியர்களிடம், ''இந்தப் பெண்ணிடம் குழந்தை இருப்பதால் கல்லூரி வந்து படிக்க முடியாது என்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவிடுங்கள்'' என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். ஆனால், என்னிடம் கடிதம் கேட்ட பேராசிரியர்களிடம் எழுதிக்கொடுக்க முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டு வந்துவிட்டேன் என்றார்.  

அரசு மகளிர் கல்லூரி காரிமங்கலம்

இதுகுறித்து, காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரி பொறுப்பு முதல்வர் செந்தில்குமாரை நேரில் சந்தித்துப் பேசியபோது,  ''நான்கு மாத குழந்தையுடன் வந்ததால் அடுத்த ஆண்டு வந்து படிக்கும்படி கூறினேன்'' என்று முதலில் தெரிவித்தவர், அப்படியொரு விதிமுறை கல்லூரியில் உள்ளதா என்றதும், ''இல்லை.'' பிறகு எதற்காக மாணவி கெளதமியிடம் கடிதம் எழுதிக் கேட்டீர்கள் என்றோம். கடிதம் கேட்கவில்லை என்று மறுத்தவர், ஒரு கட்டத்தில் கெளதமியை வரச் சொல்லுங்கள் சீட் கொடுத்துவிடுகிறேன் என்று நம்மைச் சமாதானப்படுத்தினார்.

இதுகுறித்து காரிமங்கலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சக்திவேல் நம்மிடம் பேசும்போது, ''சில தனியார் கல்லூரிகள், திட்டமிட்டு அரசுக் கல்லூரிகளின் சேர்க்கையைக் குறைத்து, தங்களின் (தனியார்) கல்லூரியின் சேர்க்கையை அதிகப்படுத்த இதுபோன்ற சில பேராசியர்களை கையில் வைத்துக்கொண்டு, திட்டமிட்டே உளவியல்ரீதியாக மாணவி மற்றும் பெற்றோர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தித் தானாகவே தனியார் கல்லூரியில் சேரும்படிச் செய்துவிடுகின்றனர். அதுபோலத்தான் கெளதமிக்கும் நெருக்கடி ஏற்படுத்தியுள்ளனர். பெண் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள தருமபுரி போன்ற மாவட்டங்களில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அரசு கவனம் செலுத்திக் கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற தவறுகளுக்குக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!