வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (06/07/2018)

கடைசி தொடர்பு:15:45 (06/07/2018)

முட்டைக் கொள்முதலில் முறைகேடு நடக்கவில்லை - சொல்கிறார் ஜெயக்குமார்

`வருமான வரித் துறையினரின் சோதனைக்கும்; தமிழக அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்

சென்னை, அசோக் நகரில் மீன் அங்காடியைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார், `தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. கடலில் திசை தெரியாமல் மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள். நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கை கடற்படையினர் 12 மீனவர்களையும் 2 படகுகளையும் பிடித்து வைத்துள்ளனர். இது சம்பந்தமாக மத்திய அரசிடம் முதலமைச்சர் தொடர்புகொண்டு மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வார். கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து இந்நாள் வரையில், அ.தி.மு.க அரசு எடுத்த முயற்சியின் பலனாக 3,010 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 388-க்கும் மேற்பட்ட படகுகள் மீட்கப்பட்டுள்ளன' என்றார். 

இதைத் தொடர்ந்து, அவரிடம் `சத்துணவு முட்டைக் கொள்முதலில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் டெல்லியிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட முட்டைகளில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது' குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், `முட்டைக் கொள்முதலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கும் மாநில அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை' என்றார்.