'நீதிமன்றம் அனுமதி மறுப்பது நல்லதல்ல'- முத்தரசன் காட்டம்

8 வழிச் சாலை தொடர்பாக பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையும் நீதிமன்றமும் அனுமதி மறுப்பது நல்லதல்ல" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆவேசத்துடன் கூறினார்.

விபத்தில் சிக்கிய கண்ணகியை சந்தித்து பேசிய முத்தரசன்

சில தினங்களுக்கு முன்பு ஒக்கூர் அருகே சி.பி.ஐ கட்சி சிவகங்கை மாவட்டச் செயலாளர் கண்ணகியும், சிவகங்கை வடக்கு ஒன்றியச் செயலாளர் முருகனும் கட்சியின் கிளைக்கழகம் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு சிவகங்கை நோக்கி ஒக்கூர் வழியாக வரும் வழியில் கார் மோதியதில் கண்ணகிக்கு கால் எலும்பில் அடிபட்டது. பைக் ஓட்டி வந்த  ஒன்றியச் செயலாளர் முருகன் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டதால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் தலையின் ஓடை நீக்கி  மூளையில் இருந்த ரத்தக் கசிவை நீக்கி உயிர்ப் பிழைக்க வைத்திருக்கிறார்கள். இருந்த போதிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார் அவர்.

கண்ணகி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இருவரையும்  மாநிலச் செயலாளர் முத்தரசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த முத்தரசன், ``8 வழிச் சாலை தொடர்பாக பொதுக்கூட்டம் நடத்தக்கூட காவல்துறையும் நீதிமன்றமும் அனுமதி மறுப்பது நல்லதல்ல. கருத்துச் சுதந்திரம் பார்க்கப்படுகிறது.
சேலம் டு சென்னைக்கு பல சாலைகள் இருந்தாலும் 8 மலைகளைக் குடைந்து, கனிம வளங்களைக் கொள்ளை அடிப்பதற்கு இந்த ஆட்சியாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். தமிழகத்தில் எழுதப்படாத சட்டமாக அரசின் எந்த வேலை நடந்தாலும் 20% முதல் 40% வரை கமிஷன் பெறுவதை இந்த அரசு கடைப்பிடித்து வருகிறது. தற்போது தேனி மேகமலைக் காடுகளை அழித்து சாலை போடப் போவதாக செய்தி வருகிறது. அப்படி வந்தால் தென்மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு வைகைக்கு தண்ணீர் வராது. இதுபோன்ற செயல்களைத் தடுக்க போராட்ட வியூகம் அமைப்போம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!