கோவை குடிநீர் ஒப்பந்த விவகாரத்தில் அமைச்சரை சாடும் தி.மு.க எம்.எல்.ஏ! | DMK protest against Coimbatore Water distribution contract with suez

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (06/07/2018)

கடைசி தொடர்பு:17:00 (06/07/2018)

கோவை குடிநீர் ஒப்பந்த விவகாரத்தில் அமைச்சரை சாடும் தி.மு.க எம்.எல்.ஏ!

24 மணிநேர குடிநீர் விநியோகத்துக்காக, கோவை மாநகராட்சி, பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி, தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க போராட்டம்

கோவை மாநகராட்சி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன் இணைந்து 24 மணி நேரம் குடிநீர் வழங்க 26 ஆண்டுகாலம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கு, அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி, கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசு மற்றும் மாநகராட்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மற்றும் போலீஸாரைக் கண்டித்தும், சூயஸ் நிறுவனத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக், ``எங்களது செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவரின் அனுமதியோடு, சட்டமன்றத்தில் இதுதொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தோம், ஆனால், அதில், என்னைப் பேசவிடவில்லை. கோவை மாநகராட்சியில், 24 மணிநேரமும் குடிநீர் வழங்க, 2008-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில், மாமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பொதுமக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகதான் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினோம். இதற்கான திட்ட வரையறைகளும் தயார் செய்யப்பட்டன.

ஆனால், எந்த நிறுவனத்துக்கு, ஒப்பந்தம் அளிக்கப் போகிறோம் என அப்போது முடிவு செய்யவில்லை. தற்போது அதே திட்டத்தை, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துக்கு, குடிநீர் பராமரிப்புப் பணியை 26 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. இதுதொடர்பாக, சட்டமன்ற உறுப்பினர்களிடத்திலோ, பொதுமக்களிடத்திலோ கருத்து கேட்கவில்லை. அதனால்தான், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

தி.மு.க.வினர் கைது

இதற்கு அனுமதி மறுக்கும் போலீஸார், இதுதொடர்பாக செய்திகள் வெளியிட்டாலும், கருத்து தெரிவித்தாலும் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இங்குள்ள பிரச்னைகளை, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எங்கு சென்று தெரிவிப்பது. மாமன்றம் 2 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கின்றது. இந்நிலையில்தான், குடிநீர் பராமரிப்புப் பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, யாருக்கும் தெரியாமல், சில அதிகாரிகளின் துணையோடு, தனியார் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார். சட்டமன்றத்தில், நான் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியதுக்கும், வேலுமணி பதிலளிக்கவில்லை. எஸ்.பி.வேலுமணி நினைத்திருந்தால் இந்தப் பராமரிப்புப் பணியை மாநகராட்சி நிறுவனத்துக்கு அல்லது குடிநீர் வடிகால் வாரியத்துக்கு வழங்கியிருக்கலாம். குடிநீர் பராமரிப்புப் பணியைத் தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 600-க்கும் மேற்பட்ட, தி.மு.க வினரை போலீஸார் கைது செய்தனர்.