வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (06/07/2018)

கடைசி தொடர்பு:17:10 (06/07/2018)

`மல்லையா சொத்துகள் மூலம் ரூ.963 கோடி வசூல்!' - எஸ்.பி.ஐ நிர்வாக இயக்குநர் தகவல்

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துகளை ஏலம் விட்டதன் மூலம் ரூ.963 கோடியை வசூலித்துள்ளதாகத் எஸ்.பி.ஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

விஜய் மல்லையா

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைக் கடன் நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உட்பட 13 பொதுத்துறை வங்கிகளிலிருந்து 9,000 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றிருந்தார் விஜய் மல்லையா. இந்தக் கடனை திருப்பிச் செலுத்தாமல், கடந்த 2015-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்த விவகாரத்தில் விஜய் மல்லையா மீது சி.பி.ஐ-யும் அமலாக்கத்துறையும் வழக்குகளைப் பதிவு செய்தன. இதையடுத்து, மல்லையாவுக்குச் சொந்தமான 13,900 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் அண்மையில் முடக்கினர். இதன் பின்னர், மல்லையாவுக்கு எதிராக இந்தியாவைச் சேர்ந்த 13 வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் இங்கிலாந்தில் வழக்கு தொடரப்பட்டது. 

விஜய் மல்லையா

வழக்கை விசாரித்த நீதிமன்றம், லண்டனில் உள்ள மல்லையாவின் சொத்துகளை முடக்க உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பையடுத்து மல்லையாவின் சொத்துகளை விற்று கடனை வசூலிக்க வங்கிகள் முயன்று வருகின்றன. இதுகுறித்து எஸ்.பி.ஐ வங்கியின் புதிய நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள அரிஜித் பாசு, `விஜய் மல்லையாவின் லண்டன் சொத்துகளைத் தவிர்த்து, மற்ற சொத்துகளை ஏலம் விட்டதில் 963 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. லண்டன் அமலாக்கத்துறையும் மல்லையாவுக்கு எதிராக உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். மல்லையா பெற்ற கடன்களை விரைவில் மீட்டெடுப்போம்' என்றார்.