`தமிழக டி.ஜி.பி.யைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்' - முத்தரசன் வலியுறுத்தல்

முத்தரசன்

``குட்கா விவகாரத்தில் தமிழக டி.ஜி.பி.யைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்; இல்லை என்றால் அவரே பதவி விலக வேண்டும்'' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இயற்கைச் செல்வங்களைக் காப்பாற்ற பொதுமக்கள், அரசுகள், அரசியல் கட்சிகள், என்று எல்லா தரப்பும் பொறுப்பேற்க வேண்டும். தற்போது மேகமலையில் உள்ள மரங்களை சமூகவிரோதிகள் தொடர்ந்து வெட்டி வருகின்றனர். இவர்களுக்குப் பின்னால் பெரும் வசதிபடைத்த நபர்கள் செயல்படுகின்றனர். மேகமலையில் உள்ள மரங்களை வெட்டுவதால் வைகை அணையில் நீர்வரத்துக் குறையும். இதனால் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் போன்ற 6 மாவட்டங்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்படும். ஆந்திராவுக்குச் சென்றுகூட அப்பாவி மக்கள் மரம் வெட்டுகின்றனர். இவர்களை மட்டுமே காவல்துறை கைது செய்கிறது. ஆனால், அவர்களை ஆசைவார்த்தை காட்டி மரங்களை வெட்ட வைக்கும் சமூக விரோதிகளை கைது செய்வதில்லை.

சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்தக்கூட அனுமதி வழங்கப்படுவதில்லை. ஏற்கெனவே இருக்கும் சாலையை விரிவுபடுத்தாமல் புதிய சாலையை அமைப்பது தேவையற்றது. இதனால் மலைகள், விவசாயங்கள், வீடுகள் என்று எல்லாமே பாதிப்படையும். எனவே, சேலம்- சென்னை சாலை திட்டத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பொதுவாக பெறும் திட்டங்கள் கொண்டுவருவது மத்திய, மாநில அரசுகள் கமிஷன் அடிக்கத்தான். ஸ்டெர்லைட், நீட், காவிரி போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணவேண்டுமே தவிர, போராட்டம் நடத்தும் மக்கள் மீது அடக்குமுறை செய்யக்கூடாது. நாள்களை எண்ணிக்கொண்டுதான் மாநில அரசு ஆட்சி நடத்துகிறது. இந்நிலையில், மக்களை அடக்குமுறை செய்வது ஏன். ஸ்டெர்லைட் பிரச்னையில் மக்களுக்கும், ஸ்டெர்லைட் ஊழியர்களுக்கும் இடையே தூண்டுதல்களை ஏற்படுத்த ஸ்டெர்லைட் நிறுவனமும் அரசும் முயற்சி செய்கிறது. ஸ்டெர்லைட் ஊழியர்களுக்கு அரசுதான் மாற்று வேலை ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். குட்கா விவகாரத்தில்  சிக்கிய தமிழக டி.ஜி.பி.யைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது அவரே பதவி விலகியிருக்க வேண்டும்'' என தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!