வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (06/07/2018)

கடைசி தொடர்பு:17:30 (06/07/2018)

`தமிழிசை சொல்வதில் தவறில்லை' - சொல்கிறார் செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

``எய்ம்ஸ் அமைய நாங்கள்தான் காரணம் என தமிழிசை கூறுவதில் தவறு இல்லை" என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய கவிஞர் சூரியநாராயண சாஸ்திரி என்ற பரிதிமாற் கலைஞரின் 148-வது பிறந்த நாள் இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. மதுரை விளாச்சேரியில் அவர் வாழ்ந்த வீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜூ  ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ-க்கள் நீதிபதி, பெரிய புள்ளான், மாணிக்கம், சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, ``தமிழுக்குத் தொண்டாற்றிய நாடகக் கலைஞர் பரிதிமாற் கலைஞரின் பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது சிறப்பான ஒன்று. அதன் அடிப்படையில் மாலை அணிவித்து மரியாதை செய்தது பெருமை அளிக்கிறது. பி.ஜே.பி மாநிலத் தலைவி தமிழிசை செளந்தரராஜனின் கட்சி மத்தியில் ஆளுகிறது. அதனால் எய்ம்ஸ் அமைய அவர்கள்தான் காரணம் எனக் கூறுவதில் தவறு இல்லை. ஆனால், மதுரையில் எய்ம்ஸ் அமைய நாங்கள்தான் காரணம், நாங்கள் தான் காரணம் என பலரும் கூறி வருகிறார்கள். யார் காரணமாக இருந்தாலும் மதுரைக்கு எய்ம்ஸ் வந்தால் பெருமைதான்'' என்று தெரிவித்தார்.