வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (06/07/2018)

கடைசி தொடர்பு:17:22 (07/07/2018)

`இளம்பெண்ணைக் கடத்திய கார் ஓட்டுநர்!' - துரத்திப் பிடித்த சுங்கச்சாவடி ஊழியர்கள்

பெங்களூரில் காரில் கடத்தப்பட்ட இளம்பெண், சுங்கச்சாவடி ஊழியர்களின் உதவியால் மீட்கப்பட்டுள்ளார்.

இளம்பெண்

பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் விமானநிலையத்துக்குச் செல்வதற்காக ஓலா வாடகைக் கார் நிறுவனத்தில் கார் புக் செய்துள்ளார். இரவு 11.30 மணியளவில் வாகனம் வந்துள்ளது. வாகனத்தில் ஏறிய சிறிது நேரத்தில், தான் செல்ல வேண்டிய வழித்தடத்தில் பயணிக்காமல் வேறு வழியில் கார் பயணிப்பதைக் கண்டு ஓட்டுநரிடம் இதுகுறித்து அந்தப் பெண் கேட்டுள்ளார். அவரின் கேள்விக்கு பதிலளிக்காத ஓட்டுநர், காரைத் தொடர்ந்து வேகமாக இயக்கியுள்ளார். இதையடுத்து, ஆபத்தில் சிக்கியிருப்பதை உணர்ந்த அந்தப் பெண், கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், அவரைத் தாக்கியுள்ளார். அவரிடம் இருந்த பொருள்களையும்  பறித்துள்ளார். கார் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் அந்தப்பெண்ணின் கூச்சல் வெளியில் இருப்பவர்களுக்குக் கேட்கவில்லை. 

தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகப் பயணித்த அந்தக் கார் சுங்கச்சாவடியை நெருங்கியுள்ளது. இதனைவிட்டால் தான் தப்பித்துச் செல்ல வேறு வழியில்லை என்பதை உணர்ந்தவர், கார் கண்ணாடிகளை பலமாகத் தட்டியுள்ளார். அப்போது, சுங்கச்சாவடி ஊழியர்களும் இன்னும் பிற வாகன ஓட்டிகளும் இதைக் கண்டுள்ளனர். இதையடுத்து அந்த நபர் காரை வேகமாக இயக்கியுள்ளார். சுங்கச்சாவடி ஊழியர்கள் அந்த காரை துரத்திச் சென்று, பிடித்து இளம்பெண்னை மீட்டனர். இதனையடுத்து அந்த நபர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், கார் ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரியவந்ததுள்ளது.

இதுகுறித்துப் பேசிய அந்தப்பெண், ``அலுவலகப் பணிக்காக மும்பை செல்ல வேண்டியிருந்தது. விமானநிலையம் செல்வதற்காக ஓலாவில் கார் புக் செய்தேன். காரில் ஏறும்போது மதுவின் வாடை வந்தது. கார் சென்றுகொண்டிருக்கும்போது, ஓட்டுநர் கண்ணாடி வழியாக என்னைத் தவறாகப் பார்ப்பதை உணர்ந்தேன். துப்பட்டாவைக் கொண்டு முகத்தை மறைத்துக்கொண்டேன். சிறிது நேரத்தில் நான் பயணிக்க வேண்டிய பாதை மாறி, கார் வேகமெடுத்தது. காரை நிறுத்துமாறு சத்தம் போட்டேன்.  இதன்பின்னரே சுங்கச்சாவடி வந்தது; கதவுகளை பலமாகத் தட்டினேன். அங்கிருந்த ஊழியர்களும் பிற வாகன ஓட்டிகளும் என்னை மீட்டனர்” என்றார்.