வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (06/07/2018)

கடைசி தொடர்பு:17:24 (07/07/2018)

`நெல்லுக்கு நியாயமான விலை கொடுங்கள்'- விவசாயிகள் வேண்டுகோள்

விவசாயி

``மத்திய அரசு இந்த ஆண்டு ஆதார விலையாக குவிண்டாலுக்கு 1,770 ரூபாய் அறிவித்துள்ளது. இது தங்களுக்கு லாபகரமான விலையல்ல'' என காவிரி டெல்டா விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள். ``ஒரு குவிண்டாலுக்கு 2,850 ரூபாய் விலை நிர்ணயம் செய்தால்தான் தங்களது உழைப்பையும் உற்பத்திச் செலவையும் ஈடுகட்ட முடியும்'' என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் மாசிலாமணி.

மாசிலாமணிஇதுகுறித்து ஆதங்கத்தோடு பேசும் இவர், தொழில்நுட்பக்குழுவின் பரிந்துரையின்படிதான் நபார்டு வங்கி, ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு 29,500 ரூபாய் பயிர்க்கடன் வழங்க அனுமதித்துள்ளது. உற்பத்திச் செலவின் அடிப்படையில்தான் பயிர்க்கடன் தீர்மானிக்கப்படுகிறது. வட்டி, பயிர் பராமரிப்பு மற்றும் இதரச் செலவுகளையும் இதனுடன் சேர்த்தால் ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய 38,000 ரூபாய் செலவாகிறது. உற்பத்திச் செலவோடு, 50 சதவிகிதம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி பார்த்தால், 1 ஏக்கர் நெல்லுக்கு 57,000 ரூபாய் விலை கிடைக்க வேண்டும். 1 ஏக்கரில் 2,000 கிலோ நெல் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த அடிப்படையில் கணக்கீடு செய்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,850 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். உற்பத்திச் செலவை மட்டும் கணக்கில் கொண்டாலும்கூட 1,900 ரூபாய் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு 1,770 ரூபாய் மட்டும் விலை அறிவித்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது. இதனால் நாங்கள் நஷ்டத்தைதான் சந்திப்போம்” என வேதனையுடன் தெரிவித்தார்.