வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (06/07/2018)

கடைசி தொடர்பு:17:24 (07/07/2018)

`தங்கச்சிமடத்திலிருந்து சிவகங்கைக்கு இடமாற்றம் செய்யப்படும் வெடிபொருள்கள்!’ - பொதுமக்கள் நிம்மதி

ராமேஸ்வரம் அருகே கண்டெடுக்கப்பட்ட வெடிமருந்துப் பொருள்களைச் செயல் இழக்கச் செய்வதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், அவற்றை சிவகங்கையில் உள்ள வெடிமருந்துக் கிடங்குக்கு இடமாற்றம் செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

தங்கச்சிமடத்தில் சிக்கிய வெடிமருந்து குவியலை 2-ம் முறையாக ஆய்வு செய்த அதிகாரிகள்

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர் மீனவர் எடிசன். கடந்த 25-ம் தேதி மாலை இவரின் வீட்டின் அருகே இருந்த கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பைச் சரி செய்வதற்காகக் குழி தோண்டியுள்ளனர். அப்போது குழிக்குள் துருப்பிடித்த நிலையில் இரும்புப் பெட்டிகள் தென்பட்டுள்ளன. இதையடுத்து குழி தோண்டிய அவர்கள் அவற்றை வெளியே எடுத்து திறந்து பார்த்தபோது அதில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் இருந்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்குவந்த போலீஸார் அந்தப் பகுதியைச் சுற்றி மேலும் குழி தோண்டினர். அப்போது, இயந்திர துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய 10,828 தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள், ஏவுகணையில் பயன்படக்கூடிய வெடிபொருள்கள், நில கன்னிவெடிகள், ஒரே நேரத்தில் 15 டெட்டனேட்டர்களை வெடிக்கும் திறன் கொண்ட டைனமோ, வெடிகுண்டுகளை வெடிக்கப் பயன்படுத்தும் இரும்பு ஸ்லம்புகள், எச்சரிக்கை வெடிகள் என ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.

மறுநாள் மதுரையிலிருந்து வந்திருந்த வெடிகுண்டு கண்டுபிடிப்புக் குழுவினர் வெடிபொருள்கள் சிக்கிய பகுதிகளில் நவீன கருவிகள் உதவியுடன் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் வேறு ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து, கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களை வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் ஆய்வு செய்தனர். சிக்கிய வெடிபொருள்கள் அனைத்தும் சக்தி வாய்ந்தது என்பது அப்போது தெரியவந்தது. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை சேதம் அடைந்த நிலையில் உள்ளதால், இவற்றால் ஆபத்து ஏதும் இல்லை எனத் தெரியவந்தது. மேலும், ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஏவுகணையில் பொருத்தப்படும் பொறிகளான பியூஸினை மட்டும் தனியாகப் பிரித்துப் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து ஆபத்தை ஏற்படுத்தும் இந்த வெடிபொருள்களை நீதிபதி ஆய்வு செய்தார். வெடிபொருள் செயல் இழப்பு பிரிவினரின் அனுமதி ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் வழங்க போலீஸாருக்கு நீதிபதி அறிவுறுத்தினர்.

தங்கச்சிமடத்தில் கைபற்றப்பட்ட வெடிமருந்துக் குவியல்   

இந்நிலையில், சென்னையிலிருந்து கடந்த 3-ம் தேதி மாலை தங்கச்சிமடம் வந்திருந்த மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிகுண்டு கட்டுப்பாட்டு துணை இயக்குநர் பிரசாந்த் யாதவ், சேக்உசைன் ஆகியோர் கைப்பற்றப்பட்டிருந்த வெடிகுண்டு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இதன்பின்னர், வெடிபொருள்களில் இருந்த வெடிமருந்து பொருள்களின் மாதிரிகளை ஆய்வுக்காகச் சேகரித்தனர். அப்போது குடியிருப்புப் பகுதியில் வெடிபொருள்கள் வைக்கப்பட்டிருப்பதால் அவற்றைச் செயல் இழக்கச் செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு ராமேஸ்வரம் டி.எஸ்.பி மகேஷிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், ஏவுகணையில் பொருத்தக்கூடிய பியூஸ் எனப்படும் வெடிமருந்து பொறி குறித்து தாங்கள் சான்று வழங்க இயலாது எனக் கூறிய அவர்கள், இதைத் தவிர மற்ற வெடிபொருள்களைச் செயல் இழக்கச் செய்ய உரிய அனுமதியை வழங்குவதாக கூறிச் சென்றனர். இதனால் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களைச் செயல் இழக்கச் செய்வதில் சிக்கல் நீடித்தது.

இந்நிலையில், இன்று இரண்டாவது முறையாக தங்கச்சிமடம் வந்த வெடிமருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி சேக் உசைன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வெடிபொருள்களின் மேலும் சில மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றார். இதனால், ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ள வெடிமருந்துகளின் தன்மை குறித்த அறிக்கையைப் பெற மேலும் சில நாள்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. இதனால் அச்சத்துடன் பாதுகாக்கப்பட்டுவரும் வெடிபொருள்களை சிவகங்கையில் உள்ள வெடிமருந்துக் குடோனுக்கு எடுத்துச் செல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெற்ற பின்னர் தங்கச்சிமடத்திலிருந்து வெடிமருந்துகள் எடுத்துச் செல்வதற்கான பிரத்யோக பாதுகாப்பு வசதிகள் கொண்ட வாகனத்தில் சிவகங்கைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வசித்துவரும் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.