வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (06/07/2018)

கடைசி தொடர்பு:17:25 (07/07/2018)

`ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை?’ - மருத்துவர் வாக்குமூலம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவர் ரமா ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிலதா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்கும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய கால தாமதம் ஏற்பட்ட நிலையில், ஆணையத்துக்கு இரண்டுமுறை கால நீட்டிப்பும் வழங்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினருக்கு ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. கடந்த சில நாள்களாக ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நேற்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான அப்போலோ மருத்துவமனையின் எக்கோ கருவியை இயக்கி வரும் நளினி, கடந்த 2016 டிசம்பர் 4-ம் தேதி பிற்பகல் 3.50 மணியளவில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், அப்போலோ மருத்துவமனை டிசம்பர் 4-ம் தேதி மாலை 4.20 மணிக்கு ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தது. இதனால் மாரடைப்பு ஏற்பட்ட நேரத்தில் குழப்பம் நிலவுகிறது.

ஆறுமுகசாமி ஆணையம்

இந்நிலையில், இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான மருத்துவர் ரமா,  `ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரைக் காப்பாற்ற 40 நிமிடம் போராடினோம். அவருக்கு வார்டிலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது சசிகலா பதற்றத்துடன் இருந்தார். அவரைப் பதற்றப்பட வேண்டாம் என தெரிவித்தேன்' இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரைக் காண யார் யார் வந்தார்கள் என்பதை விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.