``எங்க பொண்ணு எங்கய்யா இருக்கா?” - அமைச்சர் வீட்டில் நண்டுவிட்ட பெண்ணின் குடும்பம் | the story of the girl who protested with crabs in minister's house

வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (06/07/2018)

கடைசி தொடர்பு:14:21 (07/07/2018)

``எங்க பொண்ணு எங்கய்யா இருக்கா?” - அமைச்சர் வீட்டில் நண்டுவிட்ட பெண்ணின் குடும்பம்

ரவு 10.30... நர்மதாவின் அம்மாவை தொலைபேசியில் அழைத்த அடுத்த கணமே, போனை எடுத்துப் பேசுகிறார். ``யாருங்க இந்த நேரத்துல?'' என்கிறவர் குரலில் அத்தனை மிரட்சி. விகடனிலிருந்து எனச் சொன்ன பிறகே, குரலில் பதற்றம் குறைகிறது.

``தம்பி, நீங்க எதுக்கு போன் போட்டுருக்கீங்கன்னு எனக்குத் தெரியாது. இப்போ இந்த வீட்டுல நர்மதா இல்லே. அவள் இல்லாம ரெண்டு புள்ளைகளும் சாப்பிட மாட்டேங்குதுங்க, தூங்க மாட்டேங்குதுங்க. இப்பவும் அவளைப் பற்றிதான் பேசிட்டிருந்தோம். அதான், போன் வந்ததுமே அடிச்சுப் பெரண்டு எடுத்தோம். உங்களுக்கு எதுவும் சேதி தெரியுமாய்யா. எங்க பொண்ணு எங்கய்யா இருக்கா?” எனப் பதறுகிறார் நர்மதாவின் தாய் பார்வதி. 

நர்மதா

யார் இந்த நர்மதா?

ஜூன் 29-ம் தேதி, பட்டினப்பாக்கத்தில் உள்ள மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டு வாசலில், பச்சைத் தலைப்பாகையோடு கையில் நண்டுகளை வைத்துப் போராட்டம் நடத்திய நர்மதா நந்தக்குமாரை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். ``எலி வலையானாலும் தனி வலை வேண்டும். ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு இந்த அரசு என்ன செய்திருக்கிறது. மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தினந்தோறும் மீனவர்களுக்காகப் புதுப் புது அறிக்கைகளை வெளியிடுகிறாரே தவிர, அதை முறையாகச் செயல்படுத்துகிறாரா? மீனவ மக்களின் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதி என்ன ஆகிறது? இதற்காகத்தான் நான் அமைச்சரின் வீட்டில் நண்டுவிடும் போராட்டம் நடத்துகிறேன். இதற்கு அமைச்சர் செவி சாய்க்கவில்லை என்றால், அடுத்து ஆமைவிடும் போராட்டம் நடத்துவேன்” என ஆளும் அரசுக்கு எதிராக அதிரடி காட்டினார். 

அதன் விளைவாக சிறையில் அடைபட்டிருக்கிறார். ஆனால், நர்மதாவின் அம்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் நர்மதா சிறையிலிருப்பதே தெரியாததுதான் பெரும் சோகம்.

``நர்மதா என் பொண்ணுதாம்யா. சின்ன வயசிலிருந்தே, ஏதாவது தப்பா பட்டுச்சுன்னா உடனே தட்டிக் கேட்கிறது அவள் குணம். வீண் வம்புக்குப் போக மாட்டா. ஆனா, நியாயமாப் பேசுவா, நடந்துப்பா. ஒரு தனியார் ஸ்கூலில் டீச்சரா வேலை பார்த்தா. அப்புறம், சொந்தமா இன்ஸ்டிட்யூட் நடத்திட்டிருந்தா. அதையும் நிறுத்திட்டு, கொஞ்ச நாளா மக்களுக்காகப் போராடறதாச் சொல்லிட்டு, வெளியில் போயிட்டு வந்துட்டிருந்தா. திடீர்னு ஆள் இருக்க மாட்டா. எங்கியாச்சும் போராட்டம் பண்றதை பேப்பரிலோ டி.வியிலோ பார்த்துத்தான் தெரிஞ்சுப்போம். ஆனா, எங்கே போனாலும் பிள்ளைகள் பள்ளிக்கூடம் முடிஞ்சு வர்றதுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்துடுவா. இந்த முறைதான் ஒரு வாரம் ஆகியும் வீட்டுக்கு வரலை. ஏதோ அமைச்சர் வீட்டுக்கு முன்னாடி நண்டு விட்டுருக்காளாம். `அதனால, உன் பொண்ண அவ்வளவு சீக்கிரத்துல வெளியில விட மாட்டாங்க'னு அக்கம் பக்கத்துல பேசிக்கிறாங்க. ஊருக்கு நல்லது பண்ணப்போய் புள்ள குட்டிகளை அநாதை மாதிரி நிக்க விட்டுட்டாளேய்யா. எங்கே இருக்கா, என்ன பண்றா, சாப்பிட்டாளா தூங்கினாளான்னே தெரியலை. எனக்குப் படிப்பறிவும் கிடையாது. அவளை எப்படி வெளியில எடுக்கிறதுன்னே தெரியலேய்யா” - என வாய்விட்டு கதறி அழுகிறார் பார்வதி. 

அமைச்சர் ஜெயக்குமார்

``அண்ணா, என் அம்மா எங்கண்ணா? இன்னைக்கு ராத்திரி வீட்டுக்கு வந்துடுவாங்களா? என் தம்பி கோவிந்து தெனமும் அம்மாவை நெனச்சு அழுதுட்டே இருக்கான். ரெண்டு நாளா ஸ்கூலுக்குப் போகலை. என் ஃப்ரண்ட்ஸ் அம்மாவை டி.வியில் பார்த்ததாச் சொன்னாங்க. நாங்க பார்க்கலை. இத்தனை நாள் அம்மாவைப் பார்க்காம இருந்ததில்லே. அப்பாவும் வெளியூருக்குப் போயிருக்காங்க. நாளைக்குத்தான் வருவாங்க. பாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு நான் அமைதியா இருக்கேன். என் தம்பியைத்தான் சமாதானமே பண்ணமுடியலே. ப்ளீஸ்... எங்க அம்மாவைப் பார்க்க ஏதாவது உதவி பண்ணுங்கண்ணா” என்கிற நர்மதாவின் மகள் கதிரொளி குரல் நெஞ்சை நிலைகுலைய வைக்கிறது. 

 

 

மக்களின் உரிமைக்காக, அமைச்சரின் இல்லத்தையே துணிச்சலுடன் முற்றுகையிட்ட நர்மதா செய்த பாவம்தான் என்ன? மீனவர்களுக்காகக் குரல் கொடுக்கப்போய், ஒரு வாரத்துக்கும் மேலாகச் சிறையில் இருக்கிறார். தாயைத் தேடி ஏங்கும் பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள்? அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கட்டும். தாயைக் கண்டு பிள்ளைகளின் உள்ளம் குளிரட்டும். 


டிரெண்டிங் @ விகடன்