வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (06/07/2018)

கடைசி தொடர்பு:18:02 (07/07/2018)

`கணவர் மரணத்தில் சந்தேகம் உள்ளது’ - கூட்டுறவு சங்கத்தில் உடலை வைத்து போராட்டம் நடத்திய மனைவி

தன் கணவரின் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி உடலைக் கூட்டுறவு பால் விற்பனையாளர் சங்கத்தில் வைத்து மனைவி போராட்டம் நடத்திய சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

                                             கூட்டுறவு பால் விற்பனையாளர் சங்கம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இடைக்கட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்  குப்புசாமி.  இவர்,  இடைக்கட்டு கூட்டுறவு  பால்  உற்பத்தியாளர் சங்கத்தில் பால் அளவையாளராக 30 ஆண்டுகளாகப் பணியாற்றிவந்துள்ளார். இந்தநிலையில் குப்புசாமி நேற்று முன்தினம் குருவாலப்பர் கோயில் கிராமத்தில் பால் விநியோகம் செய்துவிட்டு இடைக்கட்டு  திரும்பிவரும்போது  விபத்தில்  படுகாயமடைந்த  நிலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். 

                                            கூட்டுறவு சங்கத்தில் உடலை வைத்து போராட்டம் நடத்திய மனைவி


அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குப்புசாமியை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றிருக்கிறார்கள். அங்கு பார்க்க முடியாது என்று சொன்னதற்குப் பிறகு மேல் சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில்  அனுமதித்திருக்கிறார்கள். அங்கு சிகிச்சைப் பலனின்றி குப்புசாமி இறந்துள்ளார். இவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி  உறவினர் இடைக்கட்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் குப்புசாமியின் உடலை வைத்து முற்றுகையிட்டுள்ளனர். 
                                     கூட்டுறவு சங்கத்தில் உடலை வைத்து போராட்டம் நடத்திய மனைவி

 
``சங்கத்தில் என் கணவருக்கும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவருக்கும்  அடிக்கடி தகராறு  நடந்துள்ளது.  இதைச் சங்கத்தினர் தட்டிக்கேட்கவில்லை. சாலை விபத்தில் சிக்கியிருப்பதுகூட அவருடைய வேலையாகத்தான் இருக்கும் என்று சந்தேகப்படுகிறோம். அதுமட்டுமல்லாமல், கூட்டுறவுச் சங்கத்திலிருந்து ஒருவர்கூட குடும்பத்தினரை சந்தித்துப் பேசாதது மேலும்  சந்தேகத்தை  ஏற்படுத்துகிறது. அதேபோல் பணியில் இருந்த பணியாளருக்கு மருத்துவத்துக்கு அதிகாரிகள் எந்த உதவியும்  செய்யவில்லை" எனக்  குற்றம்சாட்டி விபத்தை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.