வெளியிடப்பட்ட நேரம்: 17:49 (06/07/2018)

கடைசி தொடர்பு:17:44 (07/07/2018)

`என் மகன் ஒரு விளையாட்டுப் பிள்ளை!’ - பெண்ணுக்கு அறிவுரை கூறினாரா ஜே.எம்.ஆரூண்?

ஆருண் மகன் அசேனால் பாதிக்கப்பட்ட பெண்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி ஜே.எம்.ஆரூண் மகன்மீது சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். 'நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற பிறகே போலீஸார், முன்னாள் எம்.பி ஆரூண் மகன் மீது எப்.ஐ.ஆரைப் பதிவு செய்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை' எனக் குமுறுகிறார் பாதிக்கப்பட்ட பெண் ரசீதா. (பெயர் மாற்றம்)

திருப்பதியில் உள்ள சட்டக் கல்லூரி ஒன்றில் கடந்த 2015-ம் ஆண்டு படித்துள்ளார் ரசீதா. அப்போது சீனியர் மாணவி ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது. இதன்பிறகு நடந்த விவரங்கள் அனைத்தும் எஃப்.ஐ.ஆரில் பதிவாகியிருக்கிறது. அதில், 'அந்த மாணவி என்னை சீனியர் வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியராகச் சேர்த்துவிடுவதாகக் கூறினார். அதன்படி திருப்பதியில் உள்ள ஹோட்டலுக்கு அவர் என்னை அழைத்துச் சென்றார். அங்குதான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி ஆரூணின் மகன் அசேன் மௌலானாவைச் சந்தித்தேன். அப்போது, அங்கு கொடுக்கப்பட்ட குளிர்பானத்தைக் குடித்தேன். அதன் பிறகு நான் மயக்கமடைந்தேன். மறுநாள் காலையில் கண்விழித்தபோது, என்னிடம் அசேன் தவறாக நடந்தது தெரிந்தது.

இதுகுறித்து அசேனிடம் கேட்டபோது, இரவில் நடந்ததை வீடியோ எடுத்ததாகக் கூறினார். பிறகு அந்த வீடியோவைக் காட்டி என்னிடம் மீண்டும் மீண்டும் தவறாக நடந்தார். இதனால் நான் கருவுற்றேன். அதை அவரிடம் தெரிவித்தபோது துப்பாக்கி முனையில் என்னை மிரட்டி கருவைக் கலைக்கும் மாத்திரையைக் கொடுத்தார். உயிருக்குப் பயந்து அந்த மாத்திரையைச் சாப்பிட்டேன். எனக்கு நடந்த கொடுமைகளை ஆரூணிடமும் தெரிவித்தேன். அப்போது அவர், 'என் பிள்ளை விளையாட்டுக்காரப் பிள்ளை; நீதான் உன்னைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நீ எங்கு வேண்டும் என்றாலும் போ... உன் சேஃப்டியைப் பார்த்துக்கொள்' என்று கூறியதோடு தகாத வார்த்தைகளாலும் திட்டினார்.

ஆருண் மகன் அசேன்

இதையடுத்து, என்னுடைய குடும்பத்தினர் வற்புறுத்தலின்பேரில் எனக்கும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்தது. அதன் பிறகும் ஆரூணின் மகன் என்னை நிம்மதியாக வாழவிடவில்லை. அவரின் தொந்தரவால் என்னுடைய திருமண வாழ்க்கை முறிந்துவிட்டது. அதன் பிறகு மீண்டும் அசேனிடம் நியாயம் கேட்கச் சென்றேன். ஆனால், எனக்கு நீதி கிடைக்கவில்லை. இதற்கிடையில் அசேனின் மனைவி மூலம் என்மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு என்னை போலீஸார் விடுவித்தனர். எனவே, என்னுடைய வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிய அசேன் மீதும் அவரின் அப்பா ஆரூண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

புகார் கொடுத்த ரசீதாவிடம் பேசினோம். ``திருப்பதியில் எனக்கு நடந்த கொடுமை சென்னையிலும் தொடர்ந்தது. போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அரசியல் செல்வாக்கு காரணமாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற பிறகே போலீஸார் முன்னாள் எம்.பி ஆரூண் மகன்மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், முன்னாள் எம்.பி-யின் மகன்மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றேன். ஆனால், இதுவரை போலீஸார் அசேனைக் கைது செய்யவில்லை. இதற்குள் ஆரூணின் மகன் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆனால், அவருக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை. சட்டம் படித்த எனக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. மத்தியில் பா.ஜ.க ஆள்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க ஆள்கிறது. ஆனாலும், ஆரூணின் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கிறது. எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்" என்றார். 

இதுகுறித்து, அசேன் மௌலானாவிடம் பேசினோம். ``அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் எந்தவித பழக்கமும் இல்லை. என் மீது பொய்யான குற்றச்சாட்டை அவர் சொல்கிறார். என்னிடம் 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகின்றனர். இந்தச் சதிச் செயல்களுக்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் உள்ளது" என்றார்.