வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (06/07/2018)

கடைசி தொடர்பு:17:43 (07/07/2018)

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகப் பாரதிராஜா மகன்மீது வழக்கு!

பாரதிராஜா மகன் ஓட்டி வந்த கார்

குடிபோதையில் கார் ஓட்டியதாக இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மீது போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நடிகர்கள் நுங்கம்பாக்கம் போக்குவரத்து போலீஸாரிடம் அடிக்கடி சிக்குகின்றனர். நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் போக்குவரத்து விதிகளை மீறிய வழக்கில் சிக்கினார். சமீபத்தில் அதிக சத்தம் எழுப்பிய காரில் வந்த நடிகர் ஜெய்யை நுங்கம்பாக்கம் போக்குவரத்து போலீஸார் எச்சரித்து அனுப்பினர். அப்போது, பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வீடியோவை நடிகர் ஜெய் வெளியிட்டார். அது சமூக வலைதளத்தில் வைரலானது. 

தொடர்ந்து, இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் குடிபோதையில் காரை ஓட்டியதாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரின் விலை உயர்ந்த சொகுசு காரையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து சினிமா பிரபலங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது தொடர்கதையாகி வருகிறது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``நேற்றிரவு நாங்கள் நுங்கம்பாக்கத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை மடக்கினோம். அந்தக் காரை ஓட்டியவர் குடிபோதையில் இருந்தார். தொடர்ந்து அதற்கான பரிசோதனையை நடத்தி, அவரின் காரை பறிமுதல் செய்துள்ளோம். அந்தக் காரை ஓட்டியவர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ். சட்டம் என்பது அனைவருக்கும் சமம். இதனால் பாகுபாடின்றி நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றனர்.