வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (06/07/2018)

கடைசி தொடர்பு:17:39 (07/07/2018)

`வைகோவை எப்படித் திட்டலாம்?'- தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்த கலாட்டா

``பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு ஆலை தரப்பு அனுமதி கேட்கிறது. அந்த அனுமதியை அளிக்க வாய்ப்பும் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும் என்ற எண்ணம் தற்போதைய அ.தி.மு.க., அரசுக்குத் துளி அளவும் இல்லை” என ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

வைகோ

பிரணாப் முகர்ஜிக்கு கறுப்புக்கொடி காட்டியது தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின்போது ஆஜராக வைகோ நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது, அங்கிருந்த வழக்கறிஞர்கள் ஜெகதீஷ், வெற்றி ஆகியோர் வைகோவை தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர். பின்னர் ஆஜராகிவிட்டு வைகோ, நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தார். அப்போதும், வழக்கறிஞர்கள் ஜெகதீஷ், வெற்றி இருவரும் வைகோவை ஒருமையில் திட்டியுள்ளனர். இதில் வைகோவுடன் வந்தவர்கள் ஆத்திரமடைந்து அவர்களைத் தாக்கினர். களேபரத்தைப் பார்த்த அங்கிருந்த காவலர்கள், அவர்களைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்தத் தகராறால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ``ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இனி யாரும் போராடக் கூடாது என்ற நோக்கத்தில், கடந்த மே 22-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்திய மக்களில் 13 பேரை சுட்டுக்கொன்று வீழ்த்தியது காவல்துறை. இதில் மக்களின் மனநிலை, கொந்தளிப்பு எரிமலை நிலையில் இருந்ததை அறிந்து, இந்தப் பழியிலிருந்து விலகுவதற்காகத்தான், அரசாணை ஒன்றை வெளியிட்டு ஆலையை மூடி சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது அரசு. இது அரசின் முழுமையான நாடகம்.

வழக்கறிஞர்கள் மீது மதிமுகவினர் தாக்குதல்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும் என்ற எண்ணம் தற்போதைய அ.தி.மு.க., அரசுக்குத் துளி அளவும் கிடையாது. இன்ன இன்ன காரணங்களுக்காக ஸ்டெர்லைட் ஆலையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என காரணங்களைச் சுட்டிக்காட்டி கொள்கை முடிவாக எடுத்து சட்டமன்றத்தில் மசோதாவாக கொண்டு வந்தால்தான், ஸ்டெர்லைட் ஆலையை மூடிட முடியும். இல்லாவிட்டால், அவர்கள் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்று, ஆலையைத் தொடர்ந்து நடத்த முற்படுவார்கள் எனச் சொன்னோம். கொள்கை முடிவு எடுக்க அரசிடம் நீதிமன்றத்தின் யோசனையாகச் சொல்கிறேன் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதியும் சொன்னார். ஆனால், கொள்கை முடிவாக சட்டமன்றத்தில் வைக்கவில்லை. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவின்படி ஆலையை மூடி, அதற்காக வெறும் 4 வரிகளில் ஒரு அரசாணை வெளியிட்டு மூடினோம் என சொல்லி உள்ளது அரசு.

பசுமைத் தீர்ப்பாயம் தமிழகத்தில் கிடையாது. அதன் தலைமை அமர்வு டெல்லியில் உள்ளது. பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு ஆலைத் தரப்பு அனுமதி கேட்கிறது. அந்த அனுமதியை அளிக்க வாய்ப்பும் உள்ளது. ``நீதிமன்றம் ஆலையை திறக்க உத்தரவிட்டால் நாங்கள் என்ன செய்வது?” என ஒரு அமைச்சரே சொல்லிவிட்டார். அடிப்பதுபோல் அடி, அழுவதுபோல் அழுகிறேன் என்பது போல, ``மக்கள் மனநிலைப்படி ஆலையை மூடுகிறோம். இதை எப்படி தள்ளுபடி செய்து ஆலையை திறக்க வேண்டுமோ அப்படி செய்துவிடுங்கள்” என தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு யோசனை சொல்லிய ரகசிய ஒப்பந்தம்தான் இது.
 

தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர்

அந்த தைரியத்தில்தான், ``ஆலையை மீண்டும் திறப்போம்” என அனில் அகர்வால் சொல்லியிருக்கிறார். ஸ்டெர்லைட்டும் அரசும் சேர்ந்து நடத்தும் உச்சகட்ட காட்சிதான் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் நடைபெறும் வழக்கு. ஸ்டெர்லைட் ஆலையை உண்மையிலேயே மூட வேண்டும் என நினைப்பு இருந்தால் இப்போது ஏன் புதிது புதிதாக அரசு வழக்குப் போடுகிறது. மக்கள் மீதும் அமைப்புகள் மீதும் ஏன் வழக்குகள் போட வேண்டும். நீதிமன்றம் மூலம் அனுமதி வாங்கி வந்தாலும் ஆலையை திறக்கவிடாமல் மக்கள் ஒன்றுகூடி, அற வழியில் போராடுவோம். இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்குப் பயப்பட மாட்டோம். 13 பேரின் ரத்தத் துளிகள் சும்மா விடாது.” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க