`நெல்லையில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் எதிர்ப்பு கோஷம்!’ - தொழிற்சங்க நிர்வாகிகள் கைது

நெல்லையில் அமைச்சர் பங்கேற்ற நடத்துநர் இல்லாப் பேருந்துகளை இயக்கும் நிகழ்ச்சியின்போது தொழிற்சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதால், அவர்களை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

புதிய பேருந்துகள்

போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இந்தப் பேருந்துகளில் சில, இடைநில்லா பேருந்துகளாக இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்தப் பேருந்துகளில் ஓட்டுநர் மட்டுமே இருப்பார். நடத்துநர் இருக்க மாட்டார். வழியில் எங்கும் நிற்காமல் செல்லும் இந்தப் பேருந்துக்கான டிக்கெட்டுகளை முன்கூட்டியே பெற்ற பின்னரே பேருந்தில் பயணிகள் ஏற முடியும். 

இந்தவகை நடத்துநர் இல்லாத பேருந்து சேவை, நெல்லையில் இன்று தொடங்கப்பட்டது. நெல்லை மாவட்டத்திலிருந்து மொத்தம் 27 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகளை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், எம்.பி-க்கள் கே.ஆர்.பி.பிரபாகரன், வசந்தி முருகேசன், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வான இன்பதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

நெல்லையிலிருந்து நாகர்கோவில், தூத்துக்குடி, வள்ளியூர், தென்காசி, மதுரை ஆகிய நகரங்களுக்கு இடையே இடைநில்லா பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நடத்துநர் பணியிடத்தைக் குறைக்கும் வகையில் செயல்பட இருக்கும் இந்தப் பேருந்துகளுக்கு சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் தலைமையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனால் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் பிடித்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். 

தொழிற்சங்க நிர்வாகிகள்

இதுதொடர்பாகத் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த காமராஜ் கூறுகையில்,``மோட்டார் வாகனச் சட்டப்படி நடத்துநர் இல்லாமல் பேருந்துகளை இயக்கக் கூடாது. ஆனால், விதிமுறைக்கு மாறாக இந்தப் பேருந்துகளை இயக்க, அரசு முடிவெடுத்துள்ளது. இது ஆள் குறைப்பு நடவடிக்கைக்கு வழிவகுக்கும். அத்துடன் பேருந்துகள் பழையதாக மாறியதும் கதவுகள் தானாக மூடித் திறப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால் வழியில் யாராவது ஏறினால், ஓட்டுநர் பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாகும். அதனால் இத்தகைய முடிவைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்’’ என்று தெரிவித்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!