“ஆத்தீ... கடலு இம்மாம் பெருசா!?” கடலை ரசித்த மலைவாழ் சிறுவர்கள் | Tribal Children's one day visit to beach in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (06/07/2018)

கடைசி தொடர்பு:14:20 (07/07/2018)

“ஆத்தீ... கடலு இம்மாம் பெருசா!?” கடலை ரசித்த மலைவாழ் சிறுவர்கள்

நாங்க ரோடு வசதியே இல்லாத கிராமத்துல வாழுறவங்க. ஆனா, இங்க எம்மாம் பெரிய ரோடு போட்டுருக்காங்க. பஸ்ல வரும்போது பாத்தேன். ரோடு அப்டியே பளபளன்னு இருக்குதுணா. இங்க கடலுக்குப் பக்கத்துலகூட ரொம்ப நீளமா ரோடு போட்டுருக்காங்க.

“ஆத்தீ... கடலு இம்மாம் பெருசா!?” கடலை ரசித்த மலைவாழ் சிறுவர்கள்

டல். மூன்றே எழுத்துதான். ஆனால், இந்த மூன்றெழுத்தை யாரேனும் எங்கேயாவது; எப்போதாவது சொல்லக் கேட்டால் உள்ளத்தில் ஒரு பேராவல் உண்டாகும். மனம் பரவசப்படும். குதூகலிக்கும். சீறி வரும் வெள்ளி நிற அலைகள்போல உற்சாகமானது கரை புரண்டு ஓடும். சென்னை மெரினா கடற்கரையும் நாள்தோறும் ஆயிரமாயிரம் மக்களை மகிழ்வித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இன்றோ தன் மடியில்  துள்ளிக்குதித்து ஓடியாடி மகிழும் இந்தப் பிள்ளைகளைப் பார்த்துக் கொஞ்சம் கூடுதலாகவே ஆர்ப்பரித்திருந்தது. 

மெரினா கடலை ரசிக்கும் சிறுவர்கள்

பிறந்ததிலிருந்தே மலையும் மலை சார்ந்த வாழ்வாதாரத்தையும் கொண்டிருந்த மலைவாழ் மக்களின் பிள்ளைகள் முதன்முறையாகக் கடலை நேரில் பார்க்க சென்னை வந்துகொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு நாமும் பேராவலோடு மெரினா நோக்கி விரைந்தோம். 

கண்ணகி சிலைக்குப்பின்னே நேராக கடற்கரைப் பகுதிக்குச் சென்றோம். அங்கே ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடலில் இறங்கி அலையில் கால் நனைத்தபடியே அங்குமிங்கும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். வெயில் சுள்ளென உரைக்கும் அந்த மதிய நேரத்திலும்கூட அவர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் வானவில்லின் பிரகாசம் ஜொலித்தது. 

மெரினாவில் மலைவாழ் சிறுவர்கள் சிறுமிகள்

அலைகளில் கால் நனைத்துக் கொண்டிருந்த ஒரு சிறுமி “ஏ பேச்சியம்மா சும்மா மணல்லயே நின்னு வேடிக்கை பார்க்காம இங்க வாடி. அலை ஒண்ணுமே செய்யாது. ஜாலியா இருக்கு” என்று மணலில் நிற்கும் தன் தோழியை அழைக்க, “போ நா வர மாட்டேன். எனக்கு பயமா இருக்கு” என்று சத்தம் போடுகிறாள். 

“அங்க பாருடி ரோஜாவ... குதிர மேல ராணியாட்டம் போறா. நாமளும் போவோமா?" என்கிறாள் இன்னொரு சுட்டி. இப்படியாக கலகலப்பும் குதூகலிப்புமாக நகர்ந்துகொண்டிருந்தது. இடைப்பட்ட நேரத்தில் நாம் யாருடனாவது பேசலாம் என்று பார்த்தால் “அண்ணா கொஞ்ச நேரம் அலையில நின்னுட்டு வந்துடுறேன்ணா” என்று நைசாக நழுவிக்கொள்கிறார்கள். அதுவும் சரிதான் கொண்டாட்டத்தில் திளைத்திருக்கும் அந்தச் சுட்டிகளை சிறிது நேரத்திற்கு நாம் தொந்தரவு செய்யாமல் இருப்பதே சரி என்ற முடிவுக்கு வந்திருந்தோம். 

அரை மணி நேரத்திற்கும் மேலாகியது. ஆனாலும், யாருமே சோர்வடையவில்லை. ஒவ்வொருவருமே வெயிலோடு உறவாடி கடலோடு விளையாடிக்கொண்டே போக அவர்களை அழைத்து வந்த அணைக்கட்டு திமுக எம்.எல்.ஏ நந்தகுமார் தூரத்திலிருந்து குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். “போதும்டா கண்ணுங்களா ரொம்ப நேரம் விளையாடிச்சு. நாம போய் சாப்பிட்டுட்டு அப்பறமா வந்து விளையாடலாமா? ” என்று சொல்ல அனைவரின் முகமும் சுருங்கியது. “அச்சச்சோ புள்ளைங்களா அலையில ரொம்ப நேரம் விளையாடுனா சோர்வாகிடுவீங்க. நாம இன்னும் மாமல்லபுரம் வேற போகணுமில்லய்யா. வாங்க தண்ணிய விட்டு மேல வாங்க. நாம எல்லோரும் குதிரை சவாரி போலாம்” என்றதும் “ஐ குதிர சவாரி நான் வரேன் நான் வரேன்” என்று போட்டி போட்டுக் கொண்டு கரைக்கு ஓடி வந்தார்கள் பிள்ளைகள். 

கடலை ரசித்தபடியே குல்பி சாப்பிடும் சிறுமிகள்

“அண்ணா, எம்பேரு ரோஜா. நான் ஆறாவது படிக்கிறேன். எங்க முத்தனுர் கிராமத்துல ரோடு வசதிகூட கிடையாது. எங்க போகணும்னாலும் மலையில நடந்துதான் போகணும். என் அப்பா கூலி வேல பாக்குறாரு. அம்மா தோட்டத்துல விவசாயம் பண்ணுறாங்க. எங்க வீட்டுல வருசத்துக்கு ஒரு வாட்டி தீபாவளிக்கு துணி எடுக்குறதுக்காக திருவண்ணாமலைக்குக் கூட்டிட்டு போவாங்க. அதைத்தாண்டி நான் வேற எங்கேயும் போனதில்ல. ரெண்டு நாளைக்கு முன்னாடி எம்.எல்.ஏ சார் எங்களை மெட்ராசுக்குக் கூட்டிட்டுப் போறாங்கன்னு டீச்சர் சொன்னதும் ரொம்ப குஷியாகிடுச்சு. நாங்க ரோடு வசதியே இல்லாத கிராமத்துல வாழுறவங்க. ஆனா, இங்க எம்மாம் பெரிய ரோடு போட்டுருக்காங்க. பஸ்ல வரும்போது பாத்தேன். ரோடு அப்டியே பளபளன்னு இருக்குதுணா. இங்க கடலுக்குப் பக்கத்துலகூட ரொம்ப நீளமா ரோடு போட்டுருக்காங்க. ஜாலியா இருக்குதுண்ணா. நல்ல காத்து அடிக்குது. சில்லுன்னு குளுருதுணா. அந்த அலை என்னப் பாத்துத்தான் வருதுணா. நான் ஓடுறேன்” என்றபடியே சிரிக்கிறார். அலையோடு போட்டி போட்டு ஓடுகிறார். மண்ணில் பதியும் அவர் பாதத் தடங்கள் அந்தச் சுட்டியை துரத்திக்கொண்டே போகிறது. 

“நான், பேச்சியம்மான்ணே... தொங்குமலைதான் என் ஊரு. அப்பாவும் அம்மாவும் வெவசாயம் பாக்குறாங்க. எங்க ஊருல பள்ளிக்கூடம் கூட கிடையாது. பக்கத்து கிராமத்துல இருக்கிற ஸ்கூலுக்குத்தான்  மலை ஏறிப்போயி படிச்சிட்டு வருவோம். என் வீட்டுக்குப் பக்கத்துல குளம் இருக்கு. நாங்க அதைப் பார்த்துருக்குறோம். ஆனா, அந்தக் குளம் மாதிரி ஆயிரம் குளத்தை ஒண்ணா வெச்சா எப்படி இருக்குமோ இல்ல இல்ல, ரெண்டாயிரம் குளத்தை வெச்சா எப்படி இருக்குமோ அந்த மாதிரி இருக்குணா இந்தக் கடலு. காலைல பீச்சுக்குள்ள வந்ததுமே கண்ணகி சிலை, பாரதியார் சிலைனு எல்லாச் சிலைகளையும் பார்த்தோம். தமிழ் புத்தகத்துல கண்ணகி அம்மா, பாரதியார் ஐயாவப்பத்தி எல்லாம் நிறைய படிச்சிருக்குறேன். அவங்க சிலைய பக்கத்துல இருந்து பாத்ததுல சந்தோஷமா இருந்துச்சு. அது மாதிரிதான் கடலையும் புத்தகத்துலதான் பாத்துருக்கோம். சின்னதா வரைஞ்சி வெச்சிருப்பாங்க. நேத்து ராத்திரி கூட என் அம்மா கடலுன்னா ரொம்ப பெருசா இருக்குமேன்னு சொன்னாங்க. ஆனா, இம்புட்டுப் பெருசா இருக்கும்னு நினைச்சுக் கூட பார்க்கலணா. இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” சொல்லிக்கொண்டே வாய்விட்டுச் சிரிக்கிறார். அவர் சிரிப்பில் மின்னல் வெட்டுகிறது. 

குதிரை சவாரி செய்யும் சிறுமிகள்

அணைக்கட்டு எம்.எல்.ஏ நந்தகுமார் பேசும்போது, “நிச்சயமா இன்றைய நாள் இந்தக் குழந்தைகளுக்கு அவங்க வாழ்க்கையில மறக்க முடியாத நாளா இருக்கும். தன்னோட சொந்த கிராமத்தையே தாண்டாத இந்தப் பிள்ளைகள் சென்னை வரை வந்து கடலைப் பார்த்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் கூலி வேலை பார்க்கும் பெற்றோர்களின் பிள்ளைகள்.  நான் அவர்கள் படிக்கும் பள்ளிக்குச் சென்று கடல் எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு புத்தகத்திலிருந்த ஒரு படத்தை எடுத்துக் காட்டினார்கள். அதைத்தவிர கடல் பற்றி விவரிக்க அவர்களுக்குத் தெரியவில்லை. அதுதான் என்னை இவர்கள் எல்லோரையும் இங்கே அழைத்து வர வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்தது. காலை நாங்கள் அணைக்கட்டிலிருந்து கிளம்பியது முதலே அனைவரும் ஆர்வத்தோடு இருந்தார்கள். அந்த ஆர்வம் இப்போது கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. யாரையும் கட்டுப்படுத்தாமல் அவர்களின் சுதந்திரத்திற்கு விட்டிருக்கிறோம். அதேநேரத்தில் பாதுகாப்பிற்காக ஆசிரியர்களையும் உடன் அழைத்து வந்திருக்கிறோம். இங்கிருந்து கிளம்பி மதிய உணவை முடித்துவிட்டு நேராக மாமல்லபுரம் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு இரவிற்குள் அனைவரையும் பத்திரமாக அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுவோம்” என்று நந்தகுமார் பேசிக்கொண்டிருக்கும்போதே தூரத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. 

“சார் வழி விடுங்க வழி விடுங்க. நான்தான் வேலு நாச்சியார் வர்றேன். குதிரை மீது வேகமாக வரும் எனக்கு வழி விட்டு நில்லுங்க ”என்று சத்தமாகக் குரல் கொடுத்துக்கொண்டே குதிரையின் மீது கம்பீரமாக வருகிறார்கள் சில மாணவிகள். செவி வழியாகவும் புத்தகத்தின் வாயிலாகவும் படித்தும் பார்த்தும் கற்பனையாக உள்ளத்தில் நினைத்து வைத்திருந்த கடலையும் கதாபாத்திரங்களையும் நிஜத்தில் பார்த்து ரசிக்கும் அந்தச் சுட்டிகள் அனைவருமே அழகோவியமாகத் தெரிந்தார்கள். மெரினா இன்னொரு காவியத்தை அரங்கேற்றியிருக்கிறது. 


டிரெண்டிங் @ விகடன்