Published:Updated:

`ப்ளீஸ் பயப்பட வேண்டாம்!'- திருச்சியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு குறித்து கலெக்டர்

திருச்சி அரசு பொது மருத்துவமனை
திருச்சி அரசு பொது மருத்துவமனை

திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இந்த நிலையில், திருச்சி கலெக்டர் சிவராசு, `யாரும் பயப்பட வேண்டாம் அனைவரும் ஆரோக்கியமாக உள்ளதாக' கூறுகிறார்.

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுதொடர்பான பட்டியலையும் அவர் வெளியிட்டார். அந்தப் பட்டியலில் திருச்சி மாவட்டத்தில் மேலும் 13 பேர் அதிகரித்துள்ளனர்.

திருச்சியில் மொத்தம் இதுவரை 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கரூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 3 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். கடந்த சனிக்கிழமை முதல் திருச்சி மாவட்டத்தில் சுமார் 50 பகுதிகள் உயரடுக்கு பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளியான மருத்துவ அறிக்கையின்படி திருச்சியில் மேலும் 13 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதுதான் பலரையும் அதிர வைத்துள்ளது.

`ப்ளீஸ் பயப்பட வேண்டாம்!'- திருச்சியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு குறித்து கலெக்டர்

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட திருச்சி கலெக்டர் சிவராசு, ``திருச்சி மாவட்டத்தில், கொரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருகைபுரிந்த 3,045 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அதில் 1589 பேர் 28 நாள்களை கடந்துவிட்டதால் பயப்படத் தேவையில்லை. மேலும், மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்றுவரை 126 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 3 பேர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மற்ற 123 பேர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் வீடுகளைச் சுற்றியுள்ள 110 பகுதிகளில் இதுவரை 58,494 குடியிருப்புகளில் 867 மருத்துவக்குழுவினர் வீடு வீடாக ஆய்வு செய்து 2,46,886 நபர்களை பரிசோதனை செய்துள்ளனர். எந்த ஒரு நபருக்கும் கொரோனா வைரஸ் நோய் அறிகுறி இல்லை.

திருச்சி கலெக்டர் சிவராசு
திருச்சி கலெக்டர் சிவராசு

ஏற்கெனவே சிகிச்சை பெற்று வரும் 19 நபர்களின் உடல் நிலை சீராக நல்ல நிலையில் உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 123 பேரில் 53 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவு 4-ம் தேதி வந்ததில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்டது. மேலும் அதில் 36 பேருக்கு தொற்று இல்லை.

இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி மேலும், 33 நபர்களுக்கு நோய்த் தொற்று இல்லையென அறிக்கை வந்ததை அடுத்து நோய்த் தொற்று இல்லாத 69 பேரும் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் அமைக்கப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் 28 தினங்களுக்குப் பின் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு, ஆய்வு முடிவுக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

கொரோனா
கொரோனா
`மருத்துவமனையில் சாப்பாடு சரியில்லை; அதான் வந்துட்டேன்!’-திருச்சி மருத்துவர்களை அதிரவைத்த  நபர்

இந்த நிலையில், 28 நபர்களின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. அதில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்டது. மற்றவர்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இன்னும் 9 பேருக்கு மட்டும் மருத்துவ அறிக்கை வர வேண்டும். கொரோனா குறித்து ப்ளீஸ் யாரும் பயப்பட வேண்டாம்.

தற்போதுவரை கொரோனா வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்ட திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 30 பேரும் அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் அனைவரின் உடல் நிலையும் நல்ல நிலையில் உள்ளது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு