Published:Updated:

நீலகிரி: சமைக்கும்போது விபரீதம்; உடல் கருகி உயிரிழந்த 13 வயது சிறுமி!

தீ விபத்து
தீ விபத்து ( Pixabay )

நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியைச் சேர்ந்த நிஷாந்தி என்ற 13 வயது சிறுமி உணவு சமைக்கையில் உடையில் தீப்பற்றி எரிந்து பரிதாபமாக உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகிலுள்ள மழவன் சேரம்பாடியைச் சேர்ந்தவர் ராஜா-லலிதாகுமாரி தம்பதியர். இந்தத் தம்பதியரின் நிஷாந்தி என்ற 13 வயது மகள் பந்தலூரிலுள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவந்திருக்கிறார்.இந்தநிலையில் கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாகத் தெரிகிறது. தாய் லலிதாகுமாரி தனது மகள் நிஷாந்தியுடன் வசித்துவந்திருக்கிறார்.

நிஷாந்தி
நிஷாந்தி

கடந்த 12-ம் தேதி நிஷாந்தி தனது வீட்டில் உணவு சமைக்க முற்பட்டுள்ளார். அப்போது திடீரென சிறுமியின் உடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியுள்ளது. தீக்காயத்தால் அலறிய சிறுமியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கடுமையான தீக்காயத்துடன் இருந்தவரை மீட்டு சிகிச்சைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சிறுமி நிஷாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இது குறித்து சேரம்பாடி காவல்துறையினர் ,"கொரோனா காரணமாக பள்ளிகள் இயங்காததால், குழந்தைகளுக்குப் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டுவருவது கவலையாக இருக்கிறது. இந்த மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இந்தச் சம்பவம் குறித்து சேரம்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு