மும்பையில் உள்ள இந்திய கடற்படை நிலையத்தில் பணிபுரிபவர் மதன்ராய். அவரின் மனைவி ரெஜினா ராய். இவர்களின் மகள் ஜியாராய் (13). மாற்றுத் திறனாளியான இந்தச் சிறுமி ஏற்கெனவே பல நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்து வருகிறார்.
அந்த வகையில் இப்போது, பாக் நீரினை கடல் பகுதியான இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து தமிழகத்தின் முகவையான தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை சுமார் 28 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீச்சல் அடித்து சாதனை புரிந்துள்ளார்.
ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் இருந்து விசைப்படகு மூலம் பெற்றோர், பயிற்சியாளர் உள்ளிட்ட 11 பேருடன் இலங்கை தலைமன்னார் சென்ற சிறுமி, நேற்று அதிகாலை 4.22 மணிக்கு இலங்கை தலைமன்னாரில் இருந்து நீச்சல் அடித்து மாலை 5.32 மணிக்கு தமிழகத்தின் முகவையான அரிச்சல்முனை வந்தடைந்தார். 13 மணிநேரம் 10 நிமிடத்தில் 28 கிலோமீட்டர் விடாமல் நீச்சலடித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அரிச்சல்முனைக்கு நீச்சலடித்து வந்த சிறுமி ஜியாராயை அங்கு குழுமியிருந்த பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் போலீஸார் கைதட்டி உற்சாகத்துடன் வரவேற்றனர். சாதனையை நிகழ்த்திய உடன் தேசியக்கொடியுடன் கடலில் இருந்து வெளியே வந்த சிறுமிக்கு பொன்னாடை அணிவித்து மலர்க்கொத்து கொடுத்தும் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், தமிழகக் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு நேரில் வந்து சிறுமியின் சாதனையைப் பாராட்டினார். அப்போது சிறுமிக்கு பொன்னாடை அணிவித்து, மலர்க் கொத்து கொடுத்து, நினைவுப் பரிசு வழங்கினார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதைத் தொடர்ந்து சிறுமியின் சாதனை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், ``தமிழகத்தைப் பொறுத்தவரை 1,072 கிலோ மீட்டர் கடற்கரை உள்ளது. எந்த நாட்டிலும் இது போன்ற கடற்கரை கிடையாது. நம்மிடம் அவ்வளவு பெரிய சொத்து உள்ளது. கடலில் நன்றாக நீச்சல் அடிக்கலாம். வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து நீச்சல் அடித்து செல்கின்றனர். நம்ம ஊர் இளைஞர்களுக்கு அந்தப் பழக்கம் இன்னும் வரவில்லை. நீச்சலடிப்பது உயிர் காக்கக்கூடிய ஒரு விளையாட்டு. மெரினா போன்ற கடற்கரையில் சராசரியாகக் கடலில் விழுந்து நீச்சல் தெரியாமல் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.
அதேபோல் ஊர்களில் குளம், ஆறுகளில் நிறைய குழந்தைகள் இறந்துகொண்டிருக்கின்ற அவலம் உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் நீச்சல் கற்றுக்கொண்டு, இதேபோல் சாகசங்களில் ஈடுபட வேண்டும் என்பதற்காகத் தமிழக காவல்துறை சார்பிலும் ஒரு முறை இலங்கையிலிருந்து நீச்சலடித்து வந்தோம்.

இலங்கையிலிருந்து 28 கிலோ மீட்டர் நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ள ஜியாராய் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். காவல்துறை சார்பில் அந்தச் சிறுமிக்கு எங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பாக, அவரின் தந்தை, மாற்றுத்திறனாளியான தன் குழந்தையை இந்த அளவுக்கு சாதனை படைக்க வைத்து நமக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறார். தன் குழந்தை ஒரு சாதனையாளராக மாற்றியுள்ள அவருக்கும் காவல்துறை சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சிறுமியின் தந்தை மதன்ராய் நம்மிடம் பேசும்போது, ``என் மகள் இலங்கை தலைமன்னாரில் இருந்து தமிழகத்தின் அரிச்சல்முனை வரை 28 கிலோமீட்டர் தூரத்தை 13 மணி நேரத்தில் கடந்துள்ளார். அதிகாலை நீச்சல் அடிக்கத் தொடங்கியபோது கடல் நீர் மிகவும் உள்வாங்கி நீச்சல் அடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். பின்னர் நேரம் ஆக ஆக கடல் நீர் ஓட்டம் நீச்சல் அடிப்பதற்கு ஏதுவாக அமைந்தது. அதன் பின்னர் வேகமாக நீச்சல் அடித்தார். 11 மணி நேரத்தில் அரிச்சல்முனைக்கு வர திட்டமிட்டிருந்த நிலையில் கடல் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் 2 மணி நேரம் கூடுதலாகிவிட்டது. இவ்வளவு சிரமங்களுக்கு இடையிலும் என் மகள் விடாமல் நீச்சலடித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது'' எனத் தெரிவித்தார்.

ஜியாராய் கடந்த 2019-ம் ஆண்டு முதல் தேசிய மற்றும் மாநில அளவிலான பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு இதுவரை 24 தங்கப் பதக்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.