ஒரு டன் கரும்புக்கு 2,850 ரூபாய்! - அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

கடலூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் 3 புதிய பேருந்துகளை மாவட்ட  ஆட்சியர்  தண்டபாணி முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

கடலூர்

இம்மூன்று பேருந்துகளில், தடம் எண்.188 கடலூரிலிருந்து புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக சென்னைக்கும், தடம் எண்.152 கடலூரிலிருந்து புதுச்சேரி, திண்டிவனம் வழியாக சென்னைக்கும், தடம் எண்.142 காட்டுமன்னார்கோயிலிருந்து சேத்தியாத்தோப்பு வடலூர், பண்ருட்டி வழியாக சென்னைக்கும் செல்வதற்கு தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. 

பின்னர் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், `கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான விலை தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், டன் ஒன்றுக்கு 2,850 ரூபாய் வழங்கும் சட்ட மசோதாவை தமிழக முதல்வர் நேற்று தாக்கல் செய்ததாகவும் இந்த மசோதாவின் சாராம்சம் என்னவென்றால், புதிய கரும்பு விலை நிர்ணயக் கொள்கை என ஒரு கொள்கை ஏற்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில் சர்க்கரை ஆலையில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை மட்டுமல்லாமல் உபபொருள்களான கரும்புச் சக்கை மற்றும் கரும்புக் கழிவான மொலாசசுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சர்க்கரை ஆலையில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையிலிருந்து 75 சதவிகிதமும், சக்கை மற்றும் மொலாசஸிலிருந்து 70 சதவிகிதமும் வருவாய் பகிர்மான அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் விலை நிர்ணயம் ஆன 2,550 ரூபாயிலிருந்து மாநில அரசு சார்பில் டன் ஒன்றுக்கு 200 ரூபாய் மாநில அரசு சார்பில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் ஆலை நிர்வாகம் கொடுப்பதால் இரண்டாயிரத்து எண்ணூற்று ஐம்பது ரூபாய் தொடர்ந்து விவசாயிகளுக்கு கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு உரிய தொகை கிடைக்காமல் இருந்த நிலையில், இனி வரும் காலங்களில் இந்த 2,850 ரூபாய் தொடர்ந்து கிடைப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்துக்கு வரும் சீயேட் தொழிற்சாலையின் மூலம் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் இதில் 50 சதவிகிதம் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் 20 சதவிகிதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இந்த நிறுவனம் முன்வந்துள்ளதாக அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!