விடுமுறை முடிந்து டெல்லி திரும்பிய நெல்லை போலீஸ் மாயம்! - கவலையில் உறவினர்கள்!

நெல்லையைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர், விடுமுறை முடிந்து ரயிலில் டெல்லி திரும்பிய நிலையில் திடீரென மாயமாகியுள்ளார். டெல்லி சென்ற போலீஸ் மாயம் என்ற தகவலால், அவரது உறவினர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

போலீஸ் மாயம் - அண்ணாதுரை

நெல்லை பாளையங்கோட்டை பட்டுப்பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர், அண்ணாதுரை, 36 வயதான இவர் டெல்லியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் மகாராஷ்டிரா பட்டாலியன் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவி தெய்வக்கனி. இவர்களுக்கு கனிஷ்கா என்ற 7 வயது மகளும் நவீன் என்ற 4 வயது மகனும் உள்ளனர். 

அண்ணாதுரையின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகில் உள்ள மணத்தி கிராமம். இருப்பினும், குழந்தைகளின் படிப்புக்காக அவரின் குடும்பம் பாளையங்கோட்டையில் தங்கியிருந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி விடுமுறைக்காக அண்ணாதுரை ஊருக்கு வந்திருந்தார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் பொழுதைக் கழித்த அவர், விடுமுறை முடிந்து கடந்த 29-ம் தேதி இரவு 9.10 மணிக்கு திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டார். 

அதன் பின்னர் 30-ம் தேதி மனைவி மற்றும் குழந்தைகளுடன் செல்போனில் பேசியுள்ளார். அதன் பின்னர் அவரின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனால், அதற்கான காரணம் தெரியாமல் தெய்வக்கனி தவித்துள்ளார். இந்த நிலையில், இந்த மாதம் 3-ம் தேதி அண்ணாதுரையின் பெட்டி மட்டும் டெல்லி ரயில் நிலையத்தில் கேட்பாரின்றிக் கிடந்துள்ளது. அதைக் கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்புப் படையினர் தெய்வக்கனியைத் தொடர்புகொண்டு தகவலைத் தெரிவித்துள்ளனர்.

உறவினர்கள் கவலை

அதனால் அதிர்ச்சி அடைந்த தெய்வக்கனி, உடனடியாக மத்திய ரிசர்வ் படை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தனது கணவர் குறித்து தகவல் கேட்டுள்ளார். ஆனால், அவர் விடுமுறைக்குச் சென்றுவிட்டு இன்னும் பணிக்குத் திரும்பவில்லை எனத் தெரிவித்தனர். இதனால் அச்சம் அடைந்த அவர் பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து தனது கணவர் மாயமான விவகாரம் தொடர்பாக கண்ணீருடன் முறையிட்டார். 

டெல்லியில் உள்ள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அண்ணாதுரை குறித்து தெரியப்படுத்தி, அவரை உடனடியாக தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார். இருப்பினும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தால் அவரின் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!