வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (06/07/2018)

கடைசி தொடர்பு:17:03 (07/07/2018)

சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற இளைஞருக்கு இரட்டை ஆயுள்! - கிருஷ்ணகிரி நீதிமன்றம் அதிரடி

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞருக்கு, கிருஷ்ணகிரி நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

உதயக்குமார்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்துள்ள பன்னப்பள்ளி தேவர் உளிமங்கலத்தைச் சேர்ந்தவர் சுவேதா, இவர் சென்னாச்சாரி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பூஜாஅஸ்வினி என்ற பெண் குழந்தை இருந்தது. கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவரும் தனித் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். பின்னர், சுவேதா ஆட்டோ டிரைவரான உதயக்குமார் என்பவரை 2-வதாகத் திருமணம் செய்துகொண்டார். 

இந்த நிலையில், கடந்த 23.8.2016 அன்று சுவேதாவின் உறவினர் மஞ்சம்மா என்பவர் தளியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரை கவனித்துக்கொள்ள சுவேதா தளிக்குச் சென்றுவிட்டார். வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பூஜாஅஸ்வினி தவறிக் கீழே விழுந்து அடிபட்டுவிட்டதாக உதயகுமார் சுவேதாவுக்குத் தகவல் தெரிவிக்கவும், சிறுமி பூஜாஅஸ்வினியை சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

ஆனால், குழந்தை பூஜாஅஸ்வினி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். குழந்தையின் உடலை டாக்டர்கள் பிரேதப் பரிசோதனை செய்தபோது குழந்தை பூஜாஅஸ்வினி பாலியல் வன்கொடுமை செய்து, உருட்டுக் கட்டையால் தாக்கப்பட்டது தெரிய வந்தது. அப்போதைய தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை விசாரித்ததில் குழந்தை பூஜாஅஸ்வினியை பாலியல் வன்கொடுமை செய்து கட்டையால் அடித்துக்கொன்றதாக ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவம் அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த வழக்கில் கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது, பெண் குழந்தையைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் குற்றவாளி உதயகுமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 20,000 அபராதமும், குழந்தையைக் கொன்ற குற்றத்துக்காக ஓர் ஆயுள் தண்டனையும் ரூபாய் 5,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கியது. பிறகு போலீஸார் உதயகுமாரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.