மாணவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை! - அசத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

விருத்தாசலம் அருகே உள்ள கவனை கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 20 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமையாசிரியை பெருந்தேவி மற்றும் உதவியாசிரியர் என இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் தலைமையாசிரியை பெருந்தேவி விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வந்தார்.

விருத்தாசலம்

அதன் ஒரு பகுதியாக கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று, அரசுப் பள்ளியின் பயன்கள் மற்றும் கல்வித் தரம் குறித்து விரிவான விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வந்தார். அதன்படி, இந்தக் கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேர்வதற்கு 8 மாணவர்கள் சேர்க்கைக்கு வந்திருந்தனர். அந்த மாணவர்கள் மற்றும் பெற்றோரை அழைத்து, அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் நடராஜன், ஆசிரியர் பயிற்றுநர் சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர். மாணவர்கள் சேர்க்கைக்கு முன்னர், பெற்றோர்களுடன் அவர்களை அழைத்துக் கொண்டு அங்குள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சென்று கல்வி நலன் வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, புத்தாடை அணிந்து, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து சேர்க்கை நடத்தினர்.

இதுகுறித்து தலைமையாசிரியை பெருந்தேவி கூறும்போது, ``தற்போது அதிக அளவில் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகி வருகின்றன. இதனால் தனியார் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்கள் மற்றும் விழிப்பு உணர்வை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்கள், தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு கிராம மக்கள் அனைவரிடமும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி, மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தோம். அதன்படி தற்போது 8 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதுபோல் இன்னும் நிறைய மாணவர்கள் சேர வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு நிகராக நாங்கள் கல்விப் பணி செய்து வருகிறோம். அதனால் எங்கள் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும்’’ என்றார். மாணவர்களுக்கு மாலை அணிவித்து பள்ளிக்கு அழைத்துச் சென்ற சம்பவம்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!