வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (06/07/2018)

கடைசி தொடர்பு:16:54 (07/07/2018)

`மக்களின் கருத்தை யார் கேட்பது?’ - சேலத்தில் கொந்தளித்த போராட்டக்காரர்கள்

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்தும் 8 வழி பசுமைச் சாலை தேவையில்லை என்பதை வலியுறுத்தியும் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய லெனின்லிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து அரசாணை நகல் எரிக்கும் போராட்டம் நடத்தினார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு அரசாணை நகல் எரிக்க முற்பட்டார்கள். காவல்துறை தடுத்து அரசாணையை அவர்களிடமிருந்து பிடுங்கினார்கள். இதனால் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கைதானார்கள்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க மாநிலச் செயலாளர் சண்முகம் கூறுகையில், ``ஒரு திட்டத்தை ஆதரிக்க எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதேபோல அந்தத் திட்டத்தை எதிர்க்கவும் உரிமை இருக்கிறது. பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடுக்கும்போது நீதிபதி, 8 வழிச் சாலைக்கு பிரசாரம் செய்வதைப் போல, 8 வழி சாலைக்கு யாரும்  எதிர்ப்பு தெரிப்பு தெரிவிக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்திருக்கிறார். இது எந்த விதத்தில் நியாயம்?

8 வழிச் சாலை நல்லதாக இருக்கட்டும்; கெட்டதாக இருக்கட்டும். முதலில் ஒரு கருத்துக்கு மாற்றுக் கருத்து வரும்போது மாற்றுக் கருத்தைக் கேட்டால் தானே, அது நல்லதா, கெட்டதா என்று தீர்மானிக்க முடியும். மாற்றுக் கருத்தே கூடாது என்று ஜனநாயக நாட்டில்  எப்படிக் கூற முடியும். அதனால் இந்த கருத்து தவறானது. ஜனநாயக முறைப்படி 8 வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, எங்களுக்கு காவல்துறை அனுமதி மறுக்கிறது. அதிகாரிகள் மறுக்கிறார்கள்; நீதிமன்றமும் மறுத்தால், மக்களுடைய கருத்தை யார் கேட்பது. சேலம் டு சென்னை 8 வழிச் சாலை தேவையற்றது. அதை எதிர்த்து இன்று நாங்கள் அரசாணை நகல் எரிப்புப் போராட்டத்தை மேற்கொண்டோம். மத்திய, மாநில அரசுகள் இந்த 8 வழிச் சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும். பல்லாயிரக்கணக்கான மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு இந்தத் திட்டம் நிறைவேற்றினால் இது எப்படி நல்ல திட்டம் என்று கூற முடியும்?

விவசாயிகள் தாமாகவே நிலங்களைக் கொடுக்கிறார்கள் என்று முதல்வர் கூறுகிறார். நான் முதல்வருக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். உங்க சொந்த மாவட்டத்தில் 8 வழிச் சாலைக்கு நிலம் கொடுக்கும் மக்களிடம் கலந்துரையாடல் செய்யுங்கள். எத்தனை பேர் நிலம் கொடுக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். கருத்து கேட்புக் கூட்டம் என்று ஒன்றை நடத்தி அதில் அ.தி.மு.க., ஆட்களை உள்ளே விட்டு, நிலமே இல்லாதவர்களை நிலம் கொடுப்பதாகக் கூற வைப்பது ஏமாற்று வேலை. இதை அரசு செய்து வருவது வெட்கக் கேடானது'' என்றார்.