வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (06/07/2018)

கடைசி தொடர்பு:16:54 (07/07/2018)

`உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது!’ - கே.பாலகிருஷ்ணன் கருத்து

`சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்க்கும் பொதுக்கூட்டத்துக்கு காவல்துறை அனுமதியளிக்காததால், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அதற்குக் கூறியுள்ள காரணங்கள் அரசியல் சாசனம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளது’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

உரிமைகளை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``அரசு முன்மொழியும் திட்டங்களின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டவும் எதிர்த்து இயக்கம் நடத்தவும் அரசியல் சட்டம் உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படையில் சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தை எதிர்க்கிற உரிமை அனைவருக்கும் உண்டு. ஏற்கெனவே 3 நெடுஞ்சாலைகள் சேலத்துக்கும் சென்னைக்கும் இடையில் உள்ள நிலையில், நான்காவது ஒரு சாலை தேவையற்றதாகும். இத்தகைய சாலைக்கு சாதாரண ஏழை விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்துவது, கிராமங்கள், நகரங்களில் வீடுகளைத் தரைமட்டமாக்குவது, பல்லாயிரக்கணக்கான மரங்கள், கிணறுகள், நீர்நிலைகள் அழிக்கப்படவுள்ளன.

ஒரு ஏக்கர் ரூ.30 லட்சம் விலை உள்ள நிலத்தை, மிகக் குறைவான நஷ்டஈடு கொடுத்து கையகப்படுத்துவதால் விவசாயிகளுக்குப் பெரிதும் இழப்பு ஏற்படுகிறது. எண்ணற்ற பாதிப்புகளை உருவாக்கும் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து பேசக் கூடாது, பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது என்ற வகையில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வதற்காக வழக்கு போடப்பட்டிருந்தால் இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு வழங்கப்படும் தீர்ப்பானது, திட்டத்தின் சாதக பாதக அம்சங்களை ஆராயலாம். போடப்பட்ட வழக்கு பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு மட்டுமே, திட்டத்தின் தகுதி குறித்து அல்ல. இந்நிலையில் மனுவின் வரையறையைத் தாண்டி திட்டத்துக்கு நற்சான்றிதழ் அளிப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்குவதாக இல்லை. மேலும், அரசியல் சாசனப் பிரிவு 19-ஐ உறுதி செய்யும் பேச்சுரிமை, கருத்துரிமை போன்றவற்றின்மீது பேரிடியாக விழுந்துள்ளது. இத்தீர்ப்பைப் பயன்படுத்தி அடிப்படை உரிமையைக் காவல்துறை, தமிழகம் முழுவதும் பறித்துவிடும் வாய்ப்பு உள்ளது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க