`எங்களைக் குறை சொல்லும் உரிமை பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இல்லை!’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு | Minister kadambur raju slams Pon.Radhakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (06/07/2018)

கடைசி தொடர்பு:16:53 (07/07/2018)

`எங்களைக் குறை சொல்லும் உரிமை பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இல்லை!’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

``எங்களைக் குறை சொல்லும் வேலையை விட்டுவிட்டு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அவரது சொந்தத் தொகுதியான நாகர்கோவில் தொகுதிக்குள் உள்ள குறைகளை தீர்க்கும் வேலையை முதலில் செய்யட்டும். எங்களைக் குறை சொல்லும் உரிமை அவருக்கு இல்லை” என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் பல்வேறு வழித்தடங்களில் 15 புதிய பேருந்துகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``எந்த மாநிலத்திலும் எந்த அரசும் சந்திக்காத அளவில் போராட்டங்கள் தமிழகத்தில்தான் நடந்துள்ளது. ஓர் ஆண்டில் மட்டும் 23 ஆயிரம் போராட்டங்களைச் சந்தித்து அத்தனைக்கும் தீர்வு காணுகின்ற அரசாக, தற்போதைய அரசு செயல்படுகிறது. இதைச் சட்டமன்றத்தில் முதல்வரே தெரிவித்துள்ளார்.

1960-களில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் எப்படி வந்ததோ, அதேபோல உணர்வுபூர்வமான போராட்டமான ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழரின் பண்பாடு, கலாசாரம் மிகுந்த போராட்டம். மாணவர்கள் முதல் அத்தனை தரப்பினரும் போராடினார்கள். அந்தப் போரட்டத்துக்கு மதிப்பளித்து போதிய பாதுகாப்பும் அளித்து முறையாகப் போராட உரிமைகளும் அளிக்கப்பட்டது. இதற்காக சட்டமன்றத்தில் சிறப்பு தனித் தீர்மானத்தை நிறைவேற்றி, மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து நிரந்தரமான தீர்வு காணப்பட்டுள்ளது.

கடந்த 1974-ல் காவிரி தொடர்பான ஒப்பந்தத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி புதுப்பிக்காமல் விட்டதால்தான் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. 26 நாள்கள் நாராளுமன்றத்தை முடக்கி, சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றி, சட்டப் போராட்டம் நடத்தி, ஏறக்குறைய 50 ஆண்டுகள் கழித்து தீர்க்கப்படாத உரிமைப் பிரச்னையான காவிரி நீர்ப் பிரச்னை இருக்கிறது. இந்த நிலையில், காவிரி ஆணையம் அமைக்கப் பெற்று, அதில் முதல் குழுக் கூட்டமும் நடைபெற்றது. 31.47 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகாவில் இருந்து நாம் பெற்றிருக்கிறோம் என்றால், அது வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி.

டெல்லி, ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களைப் போல தமிழகத்தில் முதல் முறையாக 8 வழிச் சாலை அமைக்கும் பணியை தற்போதைய அரசு செய்து வருகிறது. இதில், விவசாயிகளுக்கு அவர்களது நிலங்களுக்கு உரிய இழப்பீடுகளும் வழங்கப்பட உள்ளது.  ஸ்டெர்லைட் ஆலை மூட  அரசாணை வெளியிடப்பட்டு, ஆலை சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. ஆலை மூடப்பட்டது  மூடப்பட்டதுதான். அதனால்தான், தமிழக அரசின் அரசாணையில் தலையிட முடியாது என பசுமைத் தீர்ப்பாயம் ஆலை நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவுக்குப் பதில் அளித்துள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு பொறுப்பான மத்திய அமைச்சராக உள்ளார். அவரது மாவட்டத்தில் துறைமுகம் அமைப்பதற்கு மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மீனவ மக்களுக்கு துறைமுகத் திட்டம் குறித்து விளக்கி, அதைச் செயல்படுத்தும் பணியை அவர் முழுமையாகச் செய்யவில்லை. எங்களைக் குறை சொல்லும் வேலையை விட்டுவிட்டு, அவரது சொந்த தொகுதியான நாகர்கோவில் தொகுதிக்குள் உள்ள குறைகளைத் தீர்க்கும் வேலையை முதலில் செய்யட்டும். எங்களைக் குறை சொல்லும் உரிமை அவருக்கு இல்லை.” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க