8 வழிச் சாலைக்கான போராட்டம்.. நீதிபதிகள் கருத்துகள் அரசியல் சாசனப்படி தெரிவிக்கப்பட்டவையா? | Judges making different opinions beyond the constitution

வெளியிடப்பட்ட நேரம்: 17:24 (07/07/2018)

கடைசி தொடர்பு:17:24 (07/07/2018)

8 வழிச் சாலைக்கான போராட்டம்.. நீதிபதிகள் கருத்துகள் அரசியல் சாசனப்படி தெரிவிக்கப்பட்டவையா?

ஒரு வழக்கு விசாரணைக்கு வரும்போது, இப்படித் தனிப்பட்டவகையிலும் நீதிபதிகள் கருத்துகளைக் கூறுவது, தொடர்ந்து நடக்கிறது.

8 வழிச் சாலைக்கான போராட்டம்.. நீதிபதிகள் கருத்துகள் அரசியல் சாசனப்படி தெரிவிக்கப்பட்டவையா?

தென்னவோ தெரியவில்லை, தமிழகத்தில் பணியாற்றிவரும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அவ்வப்போது பொதுவெளியில் கூறும் கருத்துகள், அடிக்கடி விவாதத்தை உருவாக்கிவிடுகின்றன! 

மாநிலத்தில் பலத்த எதிர்ப்பை உருவாக்கியுள்ள சென்னை -சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை என்பது உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு. இதில், நேற்றுமுன்தினம் நீதிபதி டி.ராஜா உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதில், அவர் கூறிய கருத்து, எதிர்கருத்துகளை உள்ளாக்கியுள்ளது. 

``எட்டு வழிச் சாலை திட்டத்தின் நோக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ளாமலும் புரிந்துகொள்ளாமலும் எதிர்க்கக் கூடாது. இதற்காகவெல்லாம் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது” என்று கூறியுள்ள நீதிபதி டி.ராஜா, ``சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை திட்டம் எனும் மிகப்பெரிய திட்டத்தை தமிழக அரசு முதல்முதலாகக் கொண்டுவருகிறது. இரு நகரங்களுக்குமிடையில் கிராமங்கள், குக்கிராமங்கள் இதில் இணைக்கப்படுகின்றன. இந்தச் சாலைவசதி அமையும்போது பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு பெரிய ஆலைகளை அமைக்கவருவார்கள். இதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகும்; பொருளாதாரம் உயரும். நீதிமன்றத்தில் உள்ள வழக்குரைஞர்களிடம் கருத்துக் கேட்டேன். ஒருவரைத் தவிர மற்ற எல்லாருமே திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறினார்கள். தரைவழியாகச் சாலை அமைப்பதற்குப் பதிலாக உயர்மட்டச் சாலையாக அமைத்தால் பாதிப்பு ஏற்படாது” என்று அவருடைய கருத்துகளையும் சேர்த்துக் கூறினார்.

ஒரு வழக்கு விசாரணைக்கு வரும்போது, இப்படித் தனிப்பட்டவகையிலும் நீதிபதிகள் கருத்துகளைக் கூறுவது, தொடர்ந்து நடக்கிறது.

கடந்த மாதக் கடைசிவாக்கில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான ஒரு வழக்கு விசாரணையில், ``தமிழகத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. அரசியலில் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களுக்குக் கிடைத்த வரவேற்பு, தற்போதைய நடிகர்களுக்குக் கிடைக்கவில்லை...” என்று நீதிபதி கிருபாகரன் கருத்துத் தெரிவித்தார். 

உயர் நீதிமன்ற நீதிபதி

இந்த வாரம், இரட்டைச் சான்றிதழ் பெற்று தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் முறைகேடாகச் சேர்பவர்களைத் தடுக்கவேண்டும் எனத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த இதே நீதிபதி, நீட் தேர்வை எதிர்க்கும் தமிழக அரசியல்வாதிகள் ஆளுக்கு 10 ஏழை மாணவர்களின் கல்விச்செலவை ஏன் ஏற்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

நீதிபதிகளின் இத்தகைய கருத்துகள் பலவித விமர்சனங்களை கிளப்பிவிடுவதும் நடக்கிறது. அரசியல் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்புக்காட்டுவது ஒருபுறமிருக்க, சமூக வலைதளங்களில் நீதிபதிகளை கடுமையாகப் பலரும் விமர்சிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். இப்படி விமர்சிப்பவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையைப் பார்த்து, நீதிபதிகளே கேள்வி எழுப்பும் நிலையும் இருக்கிறது. இந்நிலையில், இப்படித் தனிப்பட்ட வகையில் நீதிபதிகள் கருத்துக் கூறுவது எந்த அளவுக்குச் சரி? 

நிதிபதி கே.சந்துரு

உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவிடம் கேட்டதற்கு, ``1947 முதல் 1995 வரை தமிழகத்தில் போராட்டம், கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்துவிட்டாலே தடைதான்! நீதிபதி ஜெயசிம்மபாபு 1995-ல் அரசின் கொள்கையை எதிர்த்து நடத்தப்படவிருந்த கூட்டத்துக்கு அனுமதி வழங்கினார். 2008-ல் நீதிபதி பி.கே.மிஸ்ராவும் நானும் இருந்த பெஞ்ச், தங்கள் கருத்தை வெளிப்படுத்த கூட்டம் நடத்தும் உரிமை உண்டு எனத் தீர்ப்பு வழங்கினோம். பிறகு, ராமசுப்ரமணி நீதிபதியாக வந்தபின்னும் பல கூட்டங்களுக்கு அனுமதி வழங்கினார். எங்களின் தீர்ப்பை மேற்கோள் காட்டி நீதிபதி அரிபரந்தாமன் இதைப் போலத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். இப்படியான முன்னோடித் தீர்ப்புகளை, தற்போதைய நீதிபதி பார்க்கத் தவறிவிட்டார். எதற்காகக் கூட்டம் என்பதைப் பார்ப்பது நீதித்துறையின் பணி அல்ல. கூட்டத்துக்கான தடையைப் பற்றித்தான் பேசவேண்டும். அரசுக்கு ஆதரவான கருத்துகள் வெளிப்படுத்தப்படும்போது, மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தவும் அடிப்படை உரிமை இருக்கிறது. இதை நிலைநாட்டுவதுதான் நீதித்துறையின் பணி” என்றார் சுருக்கமாக!

நீதிபதி அரி பரந்தாமன்

உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமனிடம் கேட்டதற்கு, ``எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ஆதரிப்பதா, இல்லையா என்பது அல்ல, நீதிபதியின் முன் நிறுத்தப்பட்ட வழக்கு. திட்டத்தைப் பற்றி (எதிர்த்தும்) பேசுவதுதான் வழக்கு. எந்தத் திட்டத்தையும் எதிர்த்து கருத்துசொல்லக் கூடாது என்று சொல்வது, அரசியல்சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்துரிமையைப் பாதிப்பதாகும். திட்டம் சரியா, தவறான என்பதைப் பற்றி பொதுநலன் வழக்கு தொடுக்கலாம்; அதை விசாரிக்கலாம். பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கைத் தொடுக்கலாம், விசாரிக்கலாம். இந்த வழக்கைப் பொறுத்தவரை, திட்டத்தை எதிர்த்து கூட்டம் நடத்த அனுமதி கேட்கிறார்கள். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசியல்சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமை இருக்கும்வரை அதை மறுக்கவேமுடியாது” என்ற அரிபரந்தாமன், 

``மாநிலத்தில் இதற்கு மட்டுமல்ல, தொடர்ச்சியாக அடிப்படையான கருத்துரிமை மறுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இறந்தவர்களுக்காக அங்கே இரங்கல் கூட்டம் நடத்த இதுவரை அனுமதி இல்லை. சென்னையில் கடந்த மாதம் 3, 28 ஆகிய நாள்களில் தொல்.திருமாவளவன் பங்கேற்கவிருந்த தூத்துக்குடி தொடர்பான நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இரங்கல் தெரிவிப்பதற்காகச் சென்ற வேல்முருகன் கைது! ஊழலை எதிர்த்து அதிகாரி சகாயம் அமைப்பினர், அவர்களின் அலுவலகத்தில் கார் ஷெட்டில் உண்ணாவிரதம் உட்காரக்கூட அனுமதி மறுப்பு..! ஒகி புயல் குறித்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்ட இயக்குநர் திவ்யபாரதியின் வீட்டில் தேடுதல்! மொத்தத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடிநிலையாக இருக்கிறது தமிழகத்தில்!” என்றும் வருத்தம் பொங்கச் சொன்னார்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close