ஆவணப்பட இயக்குநர் திவ்யாபாரதியைக் கைது செய்ய இடைக்கால தடை!

ஆவணப்பட இயக்குநர் திவ்யாபாரதியை ஜூலை 16-ம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை தொடரும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திவ்ய பாரதி

ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் அதில், ``கக்கூஸ் படம் மற்றும் பல்வேறு ஆவண, குறும்படங்களை இயக்கியுள்ளேன். தற்போது ஒகி புயல் பற்றிய `ஒருத்தரும் வரேல' என்ற ஆவணப்படம் எடுத்துவருகிறேன். இதன் டீசரை வெளியிட்டுள்ளேன். இந்நிலையில், எனது வீட்டுக்குப் போலீஸார் வந்து துன்புறுத்துகின்றனர். மேலும் படம் தொடர்பான ஆவணங்களைக் கேட்டு துன்புறுத்தி வருகிறார்கள். என்னை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய முயற்சி செய்கிறார்கள். எனவே, என்னை போலீஸார் கைது செய்ய தடைவிதித்து உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் திவ்யாபாரதி மீது நீலகிரி, கூடலூர் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. அரசுத் தரப்பு வாதத்தை ஏற்காத நீதிபதி, திவ்யா பாரதியை ஜூலை 16-ம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை தொடரும் என உத்தரவிட்டார். மேலும், நீலகிரி மற்றும் கூடலூர் காவல்நிலையங்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிகார வரம்புக்குள் வராது. எனவே, மனுதாரர் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!