`போராடுபவர்களைச் சிறையில் அடைப்பது தமிழக அரசுக்கு வாடிக்கையாகி விட்டது!’ - வைகோ கண்டனம்

வைகோ

ஸ்டெர்லைட் போராட்டத்தைத் தூண்டியதாக கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழல் போராளி முகிலன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக மதுரை மத்திய சிறைக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வந்தார்.

முகிலனைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,``நியூட்ரினோ, ஸ்டெர்லைட், கூடங்குளம் உள்ளிட்ட பிரச்னைகளுக்காகப் போராடிய முகிலன் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அவரை சிறைப்படுத்த தமிழகக் காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. சிறைக்குள் அவருக்கு சுகாதாரமான அறை ஒதுக்கப்படவில்லை. ஆகையால் சிறை வார்டனைச் சந்தித்து அவருக்கு நல்ல அறை ஒதுக்கித் தருமாறு கோரிக்கை வைத்துள்ளேன். தமிழகம் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இதற்காகப் போராடுகிற அமைப்புகளைத் தடை செய்வதற்கும்கூட மத்திய அரசு யோசித்துக்கொண்டிருக்கிறது. அப்படியொரு எண்ணம் இருக்குமானால், நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். இந்த ஜனநாயகப் படுகொலையை மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இலங்கை வட, கிழக்கு மாகாண அமைச்சர் விஜயகலா, விடுதலைப்புலிகள் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு முதல்வர் சி.விக்னேஸ்வரனும் ஆதரவு தெரிவித்திருந்தார். மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடுகிறவர்களை பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்து சிறையிலடைப்பதை தமிழக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!